திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டுக்கு 308 வயதாம்.. பிரசாதத்தின் பார்முலா தெரியுமா?
திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு 307 வயது முடிந்து 308 ஆவது வயது தொடங்கியுள்ளது.
கோயில்களில் பிரசாதமாக வழங்கப்படும் உணவு பொருட்களில் சுண்டல், புளி சாதம், எள்ளு சாதம், லெமன் சாதம், தயிர் சாதம், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் ஆகியவற்றின் வரிசையில் பக்தர்களின் மனதை கவர்ந்தது லட்டு பிரசாதம்.

இது திருமலை திருப்பதியில் வழங்கப்படுகிறது. இந்த லட்டை செய்வதற்காக 500 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். அந்த காலத்தில் லட்டுகளை கைகளால் உருண்டை பிடித்து வந்தனர். காலம் மாற மாற தற்போது மெஷின்கள் மூலம் லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன.
நெய், முந்திரி பருப்பு, திராட்சை வாசம் மூக்கை துளைக்கும் வகையில் அந்த லட்டு இருக்கும். திருப்பதி என்றால் மொட்டை, இன்னொன்று லட்டு என்பது திரேட் மார்க்காகிவிட்டது. திருப்பதிக்கு போய்விட்டு வந்தேன் என யாரிடமாவது கூறினால் அவர்கள் அடுத்து கேட்கும் கேள்வி லட்டு பிரசாதம் எங்கே என்பதுதான். இந்த லட்டை தயாரிப்பதற்கு தேவஸ்தானத்தில் தனித்துறையே இயங்கி வருகிறது.
175 கிராம் எடை கொண்ட இந்த லட்டு ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டுகளை காசு கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். ஒருவருக்கு இத்தனை லட்டுகள்தான் என டோக்கன் வழங்கப்படும். இந்த லட்டு பக்தர்களுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது. ஏழுமலையான் கோயிலில் 3 வகைகளில் லட்டு தயார் செய்யப்படுகிறது.
அவற்றில் ஒன்று பக்தர்களுக்கு கவுன்ட்டர்களில் விற்பனை செய்யப்படும் 175 கிராம் லட்டு. இரண்டாவது லட்டு 1750 கிராம் எடையில் தயார் செய்யப்படும் பெரிய லட்டு ஆகும். அது போல் மூன்றாவது லட்டு, சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்வதற்காகவே தயார் செய்யப்படுகிறது. 300 ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பூந்தி பிரசாதம் வழங்கப்பட்டு இருந்தது.
அதைத் தொடர்ந்துதான் 1715 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் பூந்திக்கு பதில் லட்டு பிரசாதம் வழங்கும் நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. இப்போது வரை பக்தர்களுக்கு லட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2015 இல் திருப்பதி லட்டுக்கு புவிசார் காப்புரிமை வழங்கப்பட்டது. இதனால் இந்தியாவில் திருப்பதி லட்டு என்ற பெயரில் யாரும் லட்டை தயார் செய்யக் கூடாது.
சுமார் 175 கிராம் எடை கொண்ட 5100 லட்டுகளை தயாரிக்க 185 கிலோ கடலை மாவு, 400 கிலோ சர்க்கரை, 160 கிலோ நெய், 30 கிலோ முந்திரி, 16 கிலோ உலர் திராட்சை, 8 கிலோ கல்கண்டு, 4 கிலோ ஏலக்காய் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இந்த லட்டு பிரசாதம் விநியோகமானது 307 ஆண்டுகளை கடந்து நேற்று முதல் 308 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
எப்போதுமே பக்தர்களுக்கு லட்டு மீதான மோகம் குறைந்தபாடில்லை. 1950 களில் எல்லாம் ஏழை எளிய மக்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு குறைந்த விலைக்கு கிடைக்கும் லட்டை வாங்கிக் கொண்டு வந்து மாதக்கணக்கில் வைத்து பள்ளிகளிலிருந்து பிள்ளைகள் (அதாவது நம் அப்பா, அம்மா) வந்ததும் ஸ்நாக்ஸாக கொடுப்பார்களாம்.












Click it and Unblock the Notifications