திருப்பதியில் கேட்ட மரண ஓலம்.. மயங்கிய பக்தர்களை காப்பாற்ற மக்கள் செய்த செயல்.. கலங்க வைக்குதே
திருப்பதி: திருப்பதியில் இன்று இரவில் திடீரென்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் மூச்சுத்திணறி கீழே விழுந்தனர். இதில் சேலத்தை சேர்ந்த பெண் உள்பட மொத்தம் 6 பேர் பலியாகினர். மேலும் பல பக்தர்கள் மயங்கிய நிலையில் அவர்களை காப்பாற்ற மக்கள் கண்கள் கலங்கியபடி முதலுதவி சிகிச்சை அளித்த வீடியோ வெளியாகி பரவி வருகிறது.
ஆந்திர மாநிலம் திருப்பதி கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா ஜனவரி 10ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.

சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 10 முதல் ஜனவரி 19ம் தேதி வரை சொர்க்கவாசல் என்பது திறந்து இருக்கும். இந்த 10 நாட்களும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
இத்தகைய சூழலில் தான் இன்று இரவு திருப்பதியில் திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் தற்போது வரை சேலத்தை சேர்ந்த பெண் பக்தர் மல்லிகா உள்பட 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 20 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி இலவச தரிசன டோக்கன் நாளை அதிகாலை 5 மணி முதல் 9 கவுண்ட்டர்களில் வழங்கப்பட உள்ளது.
இதற்காக திருப்பதியில் 8 கவுண்ட்டர்கள், திருமலையில் ஒரு கவுண்ட்டர் என்று மொத்தம் 9 கவுண்ட்டர்கள் நாளை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த கவுண்ட்டர்கள் அருகே இன்று இரவே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் பலியாகி உள்ளது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே தான் தற்போது இணையதளங்களில் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அதில் திருப்பதி விஷ்ணு நிவாசத்தில் இலவச தரிசன டோக்கன் பெற ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், ஆண்கள் என்று பலரும் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து உடன் வந்தவர்கள் மற்றும் பிற பக்தர்கள் மயங்கியவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் முதலுதவி சிகிச்சை வழங்கினர். மயங்கியவர்களின் எழுந்திரிக்கும்படி மார்புபகுதியில் அழுத்தம் கொடுத்தனர். சிலருக்கு தண்ணீர் கொடுத்து கண்விழிக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த வீடியோவில் சிலர் மயங்கியவர்களின் பெயர்களை கூறி கண்கலங்கியபடி முதலுதவி செய்தனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications