1 லட்சம் முதலீடு செய்தால் 10 லட்சம்.. ஒரே பொய்யில் 500 கோடி.. திருப்பூரில் 12000 பேர் ஏமாந்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: "ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.10 லட்சம் தருவோம்; ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.10 லட்சம் மதிப்பிலான நிலம் அல்லது வீடு, மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் மற்றும் கிரிப்டோ காயின்கள் வழங்கப்படும்" என ஆசை வார்த்தைகள் கூறி, சுமார் 12,000-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.500 கோடிக்கும் மேல் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு புகார் மனு அளித்தனர்.

சதுரங்க வேட்டை பாணியில் பிரம்மாண்ட விளம்பரத்தை உண்மை என்று நம்பி மக்கள் மிகப்பெரிய அளவில் ஏமாந்துள்ளனர். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்று சதுரங்க வேட்டையில் கூறுவார்கள். உண்மையில் ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாறுபவர்களும் இருப்பார்கள் என்பதே எதார்த்தமான உண்மை. ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அவரது ஆசையை தூண்ட வேண்டும். அவர்களிடம் பேசுவதில் பாதி உண்மை, பாதி பொய் இருக்க வேண்டும். அந்த பொய்யை நம்பி அவர் பணம் தர தயாராக இருக்க வேண்டும். அந்த பொய் ஓரளவு நம்பும்படி இருக்க வேண்டும். இதனை தாரக மந்திரமாக பின்பற்றி இன்று மோசடிகளை பலர் அரங்கேற்றுகிறார்கள். அப்படித்தான் திருப்பூரில் நடந்துள்ளது.

Tiruppur

திருப்பூரில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.10 லட்சம் தருவோம்; ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.10 லட்சம் மதிப்பிலான நிலம் அல்லது வீடு மற்றும 10 ஆயிரம் மாதம் பணம் என்று ஏமாற்றி உள்ளார்கள். இதில் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த மிதுன் தாமஸ் மற்றும் திண்டிவனத்தைச் சேர்ந்த சங்கர் புத்திரன் ஆகிய இருவரும் இணைந்து, கடந்த 2024-ஆம் ஆண்டு சென்னையில் 'இன்ஃபினிட் ஃபியூச்சர் லிமிடெட்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். லண்டனில் உள்ள பிரபல நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள 'ஜே.எஸ்.டபிள்யூ' போன்ற பெரு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், அல்ட்ரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், 5 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தமிழ்நாட்டின் முக்கியப் பகுதிகளில் தங்களுக்குச் சொந்தமாக நிலங்கள் இருப்பதாகவும் பிரம்மாண்ட அரங்குகளில் கூட்டங்களை நடத்தி, வண்ணமயமான ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர்.

இவர்களின் பேச்சை நம்பி, பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் என 12,000-க்கும் மேற்பட்டோர் ரூ.1 லட்சம் முதல் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.

Tiruppur

ஒன்றரை கோடி ரூபாய் இலக்கு - மீண்டும் ஏமாற்று வேலை:

முதலீட்டாளர்களுக்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணத்தைத் திருப்பி வழங்க வேண்டிய சூழலில், அக்டோபர் 5-ஆம் தேதி புதுச்சேரியில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட கூட்டத்தை நடத்தியுள்ளனர். அதில், "அனைவருக்கும் பணம் விரைவில் வழங்கப்படும்; நிலங்களும் தயார் செய்யப்பட்டு வருகின்றன" என்று கூறி மீண்டும் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளனர்.

மேலும், "புதிதாக ஆட்களைச் சேர்த்து ரூ.1.5 கோடி செலுத்தி இலக்கை எட்டினால், ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தில் உயர்பதவி வாங்கித் தரப்படும்; அவர்களுக்குத் தனி உதவியாளர்கள் (P.A.) மற்றும் சொகுசு பங்களா வழங்கப்படும்" எனச் சதுரங்க வேட்டை பட பாணியில் அளந்து விட்டுள்ளனர். இதனை நம்பி 200-க்கும் மேற்பட்டோர் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பணம் திரட்டி, தலா ரூ.1.5 கோடி வரை செலுத்தியுள்ளனர்.

நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவு:

இந்நிலையில், கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் மிதுன் தாமஸ் மற்றும் சங்கர் புத்திரன் ஆகிய இருவரும் திடீரெனத் தலைமறைவாகிவிட்டனர். இது தொடர்பாக நேரில் சென்று கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை. இதற்கிடையே, சங்கர் புத்திரனைக் காணவில்லை என அவரது சகோதரர் சிவபுத்திரன் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

காவல்துறையின் விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்கில் இத்தகைய நாடகங்கள் நடத்தப்படுவதாக அஞ்சும் பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் வாங்கிய பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.

எனவே, ரூ.500 கோடிக்கும் மேல் மோசடி செய்து தலைமறைவாக உள்ள நபர்களை உடனடியாகக் கைது செய்து, பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் பணத்தை மீட்டுத் தர மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் மனு அளித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+