கல்யாண வீட்டில் சிக்கிய சிறுவன்.. கூட்டிக் கொண்டு எஸ்கேப்பான கேட்டரிங் பெண்! திடுக்கிட்ட திருப்பூர்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் குடும்பம் நடத்தி வந்த 19 வயது இளம்பெண் மீது போக்சோ உள்ளிட்ட இரு சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். கேட்டரிங் பணிக்காக திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற பெண் சிறுவனை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பள்ளியில் படிக்கும் சிறுமிகளை ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் அதிர்ச்சி தகவலும் பெற்றோர்களை பரபரக்க வைத்துள்ளது. மேலும், ஆண் குழந்தைகளுக்கும் இது போன்ற பாலியல் தொல்லை சம்பவங்கள் நடப்பது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட திருவள்ளூரில் இரு குழந்தைகளுக்கு தாயான பெண் 16 வயது சிறுவனை ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதானது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. திருப்பூரில் சிறுவனை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற பெண் ஈரோட்டில் வைத்து கைது செய்யப்பட்டு இருக்கிறார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
19 வயது ஆகிறது கனகாவுக்கு ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) . 11 ஆம் வகுப்பு வரை படித்த அவர், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் கேட்டரிங் சர்வீஸ் தொழில் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் திருமண விழா ஒன்று நடைபெற்றிருக்கிறது. அங்கு கேட்டரிங் பணிக்கு சென்ற அந்த பெண்ணுக்கு 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த திருமணத்தில் அலங்கார வேலைக்காக அந்த சிறுவன் வந்திருக்கிறார்.
ஈரோட்டைச் சேர்ந்த அவர் தனது பெற்றோருடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. திருமண நிகழ்ச்சியில் பேசி பழகிய இருவரும் பின்னர் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்திருக்கின்றனர். இதனையடுத்து அந்த பெண் சிறுவனை காதலிப்பதாகக் கூறியுள்ளார்.ஆனால், அதற்கு சிறுவனின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். செப்டம்பர் மாதம் ஈரோட்டில் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து ஈரோட்டிலேயே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் 17 வயது சிறுவனுடன் இளம்பெண் வசித்து வருவது குறித்து அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல குழுவுக்கு தகவல் அளித்திருக்கின்றனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்ற போலீசார் அந்த பெண்ணை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில் சிறுவனை திருமணம் செய்து கொள்வதாக அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதை அடுத்து அந்தப் பெண் மீது குழந்தை திருமண தடைச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவனை அவர்களிடம் ஒப்படைக்க இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications