நயினாரை சந்தித்ததால் வந்த வினை.. திருப்பூரில் 2 போலீஸ்காரர்கள் அதிரடி இடமாற்றம்.. என்ன நடந்தது?
திருப்பூர்: பாகிஸ்தானுக்கு எதிரான ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையிலும், முப்படை வீரர்களை பாராட்டும் நோக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் பாஜக மூவர்ண கொடி யாத்திரையை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் திருப்பூரில் நடந்த யாத்திரையின்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த 2 காவலர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதற்கு கடந்த 7 ம் தேதி நம் நாடு பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் நம் நாடு ஏவுகணைகளை அனுப்பியது. 9 பயங்கரவாதிகளின் முகாம் மற்றும் விமானப்படை தளங்களை குறிவைத்து தாக்கி அழிக்கப்பட்டது.

இதனை துருக்கி கண்டித்தது. அதுமட்டுமன்றி துருக்கி நாட்டின் ட்ரோன்களை இந்தியாவை நோக்கி அனுப்பி பதிலடி கொடுக்க பாகிஸ்தான் நினைத்தது. ஆனால் நம் நாட்டின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பு அந்த முயற்சியை முறியடித்தது. நம்மை சீண்டினால் பதிலடி எப்படி இருக்கும் என்பதை நம் நாடு பாகிஸ்தானுக்கு காட்டியது.
இதனால் பயந்துபோன பாகிஸ்தான் போரை நிறுத்தும்படி நம் நாட்டிடம் கதறியது. இதையடுத்து நம் நாடும் மோதலை கைவிடுவதாக அறிவித்தது. இதனால் தற்போது எல்லையில் அமைதி திரும்பி உள்ளது. இந்நிலையில் தான் தான் ‛ஆபரேஷன் சிந்தூர் ' நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அருசு மற்றும் வெற்றிக்கு முழு முதற் காரணமாக இருந்த நம் முப்படை வீரர்களை பாராட்டி கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு பாஜக சார்பில் மூவர்ண கொடி யாத்திரை மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.
அதன்படி நேற்று திருப்பூரில் பாஜகவின் மூவர்ண கொடி யாத்திரை நடந்தது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய செயலாளரும், மாநில மேலிட பொறுப்பாளருமான அரவிந்த் மேனன், மாநில பொதுச்செயலாளர் ஏபி முருகானந்தம் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அப்போது 2 காவலர்கள் நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றிய மந்திரம், தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய சின்னச்சாமி ஆகியோர் நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசியுள்ளனர். இவர்கள் பணி நேரத்தில் அவரை சந்தித்து பேசி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இருவரும் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி காவலர்கள் மந்திரம், சின்னச்சாமி ஆகியோர் தாங்கள் பணியாற்றிய போலீஸ் நிலையத்தில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications