கட்சிக் கொடிகளுக்கு நோ.. தேசியக்கொடி மட்டுமே பறக்கும் அதிசய கிராமம்
திருப்பூர்: நம் ஊர்களில் மருத்துவமனைகள், பள்ளிகள் இல்லாத தெருக்களைக் கூட பார்த்துவிடலாம். ஆனால், அரசியல் கட்சிக் கொடிகளோ, போஸ்டர்களோ இல்லாத தெருக்களைப் பார்க்கவே முடியாது. அப்படியிருக்கையில், ஒரு ஊர் முழுவதும் தேசியக்கொடியைத் தவிர கட்சிக் கொடிகளை பறக்க விடுவதற்கோ, போஸ்டர்கள் ஒட்டுவதற்கோ தடை என்றால் நம்ப முடிகிறதா?. ஆம் தமிழ்நாட்டில் அப்படியொரு அதிசய கிராமம் உள்ளது. வாங்க தெரிந்து கொள்ளலாம்.
சுதந்திரப் போராட்டம் என்றாலே குறிப்பிட்ட சில தலைவர்களை மட்டுமே நாம் அறிந்திருக்கும் சூழலில் நாம் அறியப்படாத பல எளிய மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த வகையில், சுதந்திரப் போராட்டத்துக்காக பல தியாகிகளை சுமந்த மண்ணாகவும், சுதந்திர எழுச்சியை ஊட்டியவர்களாகவும் திகழ்ந்துள்ளனர் திருப்பூரில் உள்ள நாதம்பாளையம் கிராம மக்கள்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த நம்பியாம்பாளையம் ஊராட்சியில் உள்ளது எம்.நாதம்பாளையம். சுதந்திரப் போராட்டத்தின்போது அவிநாசி வட்டாரத்தில் உள்ள கிராமங்களிலேயே இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள்தான் அதிக அளவில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஷின் மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாக இந்த கிராமத்தின் இளைஞர்கள் சமூக அமைப்புகளை ஏற்படுத்தி சிலம்பம், மல்யுத்தப் பயிற்சி ஆகியவற்றை வழங்கி வந்துள்ளனர். மேலும், சுதந்திர உணர்ச்சியைத் தூண்டும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது, சமூக சேவைகள் செய்வது என பல்வேறு நல்ல காரியங்களில் தங்களை ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
தியாகிகள் அதிகம் பேர் வாழ்ந்த கிராமம் என்பதால் அப்போதைய கலெக்டர் சுதந்திரநல்லூர் என்று வாய்மொழியில் பெயரிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதற்கான எந்தவொரு அரசு ஆவணங்களும் இல்லை. மேலும், முன்னாள் பிரதமர் நேரு அவிநாசி வழியாக உதகைக்குச் சென்றுள்ளார். அப்போது, இந்த கிராமத்தைச் சேர்ந்தவரான பூவாசாமி கவுண்டர் என்பவருக்குத்தான் நேருவுக்கு கைத்தறி துண்டு போர்த்த வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது என்ற பெருமையும் இக்கிராமத்துக்கு உள்ளது.

சுதந்திர தாகம் கொண்ட இக்கிராமத்துக்கு மற்றொரு புகழும் உண்டு. இந்த கிராமத்தில் தேசியக் கொடியைத் தவிர எந்த ஒரு கட்சிக் கொடியையும் இங்கு பறக்கவிட அனுமதியில்லை என்பதுதான் அந்தப் புகழுக்கு காரணம். ஆம்.. ஊரின் எல்லையைத் தவிர ஊருக்குள் எங்கு பார்த்தாலும் எந்தவொரு கொடியும் கண்ணில் தென்படாது. தேர்தல் காலத்தில் கூட ஊருக்கு வெளியில்தான் கட்சிக் கொடி பறக்கவிடுவது, சின்னம் வரைவது போன்ற நிகழ்வுகள் நடக்குமாம்.

இந்த ஆச்சரிய கிராமம் குறித்து எம்.நாதம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பா.கனகராஜ் ஒன் இந்தியா தமிழுக்கு கூறியதாவது: சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் எழுச்சிமிக்கவர்களாக இந்த கிராம மக்கள் திகழ்ந்துள்ளனர். அவிநாசி வட்டாரத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற அதிக அளவிலான கிராம மக்கள் என்ற பெருமை இந்த கிராமத்தையே சேரும். இந்த கிராமத்தில் உள்ள 20க்கும் மேற்பட்டோர் சுபாஷ் சந்திரபோஸின் தலைமையில் இந்தியதேசிய ராணுவத்தில் பங்கேற்பதற்காக இங்கு பயிற்சி பெற்றுள்ளனர். ஆனால், அதற்கான அரசு ஆவணங்கள் எதுவும் இல்லாததால் இங்குள்ளவர்களுக்கு சுதந்திரப் போராட்டத் தியாகிகள் என்ற பெயர் கிடைக்கவில்லை.

அதேபோல, இந்திய நாடு சுதந்திரமடைந்து நேரு பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் அவிநாசிக்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கு கதர் ஆடை அணிவித்து மரியாதை செய்யும் வாய்ப்பு நாதம்பாளையம் கிராம மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. தேசிய இயக்கத்தில் தீவிரமாக இருந்த காரணத்தால் அந்த பொன்னான வாய்ப்பு இம்மக்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டது.
1991 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தின்போது இருபிரிவுகளுக்கிடையே கட்சிக் கொடி, சின்னம் வரைவது குறித்து கடும் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, ஊர் பெரியவர்கள் எல்லோரும் கலந்துபேசி ஊருக்குள் எந்தவிதமான கட்சிக் கொடிகளும் பறக்கவிடக் கூடாது என்றும், தேர்தலுக்கான பிரசாரங்களை வாய்மொழி அளவில் செய்து கொள்ளலாம் என்றும் உத்தரவிடப்பட்டது. அன்றுமுதல் இந்த கிராமத்துக்குள் தேசியக் கொடியைத் தவிர வேறு எந்த கொடிகளும் அனுமதிக்கப்படுவதில்லை. தற்போதும் கூட அந்த முறைதான் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் இங்கு சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். அதைத்தொடர்ந்து, குழந்தைகள் தேசத் தலைவர்கள் வேடமிட்டு ஊர்வலமாக வந்து வந்தே மாதரம் என்ற முழக்கத்துடன் விழா நிறைவு செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications