கூட்டணி கட்சிகள் இணைந்து ஒற்றுமையை பலப்படுத்தினால் தமிழகத்தில் பாஜக தலையெடுக்க முடியாது: வைகோ பேச்சு
திருப்பூர்: தமிழகத்தில் தோழமைக் கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் பாஜகவால் தலை எடுக்க முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருப்பூரில் மதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திறந்து வைத்தார். அதன்பின்னர் திருப்பூரில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொண்டார்.

சிபிஐ மாநாட்டில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சி தொடக்க காலத்தில் ஏராளமான பிரச்னைகளை சந்தித்துள்ளனர். போராட்டங்களில் துப்பாக்கி குண்டுகளுக்கும் , தூக்கு கயிறுகளுக்கும் அஞ்சாமல் இருந்தவர்கள். தோழர் நல்லக்கண்ணு வீரம் நிறைந்தவர். அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பானவர். உயிர்பலிக்கு அஞ்சாமல் நல்லக்கண்ணு போராடி இந்தக் கட்சியை வளர்த்தார்
காங்கிரஸ் ஆட்சிக்கு பின் பாஜக அரசு சனாதன அரசாக, இந்துத்துவத்தை திணிக்கின்ற அரசாக உள்ளது. ஒரே மொழி ஒரே நாடு என்பதை மத்திய அரசு திணிக்கிறது. ஒரே நாடாக அமைந்தால் சோவியத் யூனியன் போல பிரிந்து போகும் சூழல் ஏற்படும். அனைத்து மதம் மற்றும் மொழிக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும்.
ஆயுதப் போராட்டத்தை நாம் கையில் எடுக்க தேவையில்லை. மக்களுக்காக ஆட்சி செய்யாமல், பிரதமர் மோடி அம்பானி மற்றும் அதானி போன்றவர்களுக்காக ஆட்சி நடத்துகின்றனர். திருப்பூரில் நாம் எடுத்துக் கொள்ளும் உறுதி என்பது சனாதன சக்திகளை ஒரே மொழி என்று கூறுபவர்களை முறியடிக்க எடுத்துக் கொள்ளும் உறுதியாகும்.
இந்தியாவில் பாஜக எந்த மாநிலத்தில் வளர்ந்தாலும் தமிழகத்தில் அவர்கள் வளர முடியாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். தோழமைக் கட்சிகள் ஒன்றாக இணைந்து எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் ஒற்றுமையை பலப்படுத்தினால் தமிழகத்தில் பாஜக தலை எடுக்க முடியாது.
இறுதியாக நமக்கு கடமை இப்போதுதான் தொடங்குகிறது. தமிழகத்தில் பாஜக தலைகாட்ட ஆரம்பித்துள்ளனர். ஆலயங்கள் பற்றி அவர்கள் பேசுகின்றனர். நாம் ஆலயங்களுக்கு விரோதிகள் அல்ல. அதே நேரம் பகுத்தறிவு கருத்துகளை பேசுபவர்கள். அந்த பகுத்தறிவு கருத்துகளை தொடர்ந்து கூற வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications