எதிர்க்கட்சி வாக்குகள் பிரிந்துவிட்டது.. திமுக அதிமுக செய்த பெரிய தவறு.. தலைகீழாக காரணமான முடிவு
திருப்பூர்: பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றிபெறும் என்பது நிலவி வரும் நம்பிக்கையாகும். அதேநேரம் இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி தோல்வியடைவதும் உண்டு. 2019-இல் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில் கணிசமான தொகுதிகளில் அப்போதைய ஆளும் கட்சியான அதிமுக தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் தோல்வியைச் சந்தித்தது.
இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோற்கிறது என்றால், அது அரசின் மீதான மக்களின் அதிருப்தியின் வெளிப்பாடாகவே பார்க்கப்படும். ஆனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறிவிட்டன. எனவே, அடுத்தடுத்து வரும் இடைத்தேர்தல்களில் பொது வேட்பாளரை நிறுத்துவதைப் பற்றி எதிர்க்கட்சிகள் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் தேர்தலில் ஆளும் கட்சிக்குக் கடும் போட்டியை அளிக்க முடியும் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

பொதுவாக, ஒரு வலுவான ஆளும் கட்சியைத் தோற்கடிக்க வேண்டுமென்றால் அங்கு எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவது அவசியமாகும். எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாமல் தனித்தனியாகக் களம் இறங்கினால், நிச்சயமாக ஆளும் கட்சியே வெற்றிபெறும்.
2014-இல் ஆட்சியைப் பிடித்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, 2019-இல் மீண்டும் வெற்றிபெற்றதற்கு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையே காரணம் என்ற விமர்சனம் எழுந்தது. அதேபோல, 2024 தேர்தலில் பாஜக தனித்து மெஜாரிட்டியைப் பெற முடியவில்லை; கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகியவற்றின் ஆதரவுடன்தான் பிரதமர் மோடி ஆட்சியில் இருக்கிறார். எதிர்க்கட்சிகள் இன்னும் வலுவாக ஒன்றுபட்டு நின்றிருந்தால், நிச்சயம் பாஜகவிற்கு அது கடும் சவாலாக அமைந்திருக்கும். ஆம் ஆத்மி, காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் சரியாக இணைந்து செயல்படாததே 2024-இல் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றக் காரணம் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதேபோல்தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனியொருவராக விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) என்ற கட்சியை ஆரம்பித்தார். அந்தச் சாா்பில் எந்தக் கூட்டணியும் இல்லாமல் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தார். தொடர்ந்து, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
அதிமுகவில் இருந்த சில எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்துப் பதவி விலகி தவெகவில் இணைந்தனர். இதில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. கடந்த முறை அதிமுக சார்பில் மதுராந்தகத்தில் வென்ற மரகதம் குமாரவேல் இம்முறை தவெக சார்பில் போட்டியிட்டார். அதேபோல, தாராபுரத்தில் கடந்த முறை அதிமுக சார்பில் வென்ற சத்தியபாமா இம்முறையும் தவெக சார்பில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
இதில் மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமாரவேல் 72,240 வாக்குகளைக் குவித்து வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பரந்தாமன் 52,098 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துத் தோல்வியை தழுவினார். இதன் மூலம் தவெக வேட்பாளர் மரகதம் குமாரவேல், திமுக வேட்பாளரை விட 20,142 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 46,356 வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துத் தோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற தவெக வேட்பாளரை ஒப்பிடுகையில், அதிமுக வேட்பாளர் 25,884 வாக்குகள் பின்னடைவைச் சந்தித்துள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜானகிராமன் 2,298 வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) வேட்பாளர் சுகந்தி 1,701 வாக்குகளையும் பெற்றுத் தோல்வியடைந்துள்ளனர். ஆரம்பச் சுற்றுகள் முதலே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த தவெக வேட்பாளர் மரகதம் குமாரவேல், இறுதியிலும் 20,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று மதுராந்தகம் தொகுதியைக் கைப்பற்றியுள்ளார்.
தாராபுரத்தைப் பொறுத்தவரை, தவெக வேட்பாளர் சத்யபாமா மொத்தம் 66,841 வாக்குகளைக் குவித்து முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துத் தோல்வியடைந்தார். இதன் மூலம் தவெக வேட்பாளர் சத்யபாமா, திமுக வேட்பாளரை விட 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
ஆரம்பத்தில் ஐந்து சுற்றுகளில் சவாலாக இருந்த அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துத் தோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற தவெக வேட்பாளரை ஒப்பிடுகையில், அதிமுக வேட்பாளர் 21,561 வாக்குகள் பின்னடைவைச் சந்தித்துள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா 5,268 வாக்குகளையும், சிபிஐ வேட்பாளர் லட்சுமணன் 1,157 வாக்குகளையும் பெற்றுத் தோல்வியடைந்தனர். தவெக வேட்பாளர் சத்யபாமா, வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தாராபுரம் தொகுதியைக் கைப்பற்றியுள்ளார்.
இருப்பினும், இந்த வாக்கு எண்ணிக்கை நிலவரத்தைப் பார்க்கும்போது, பாமக தலைவர் அன்புமணி கூறியது போல் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தியிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், ஆளும் தவெகவிற்கு அது கடும் சவாலாக மாறியிருக்கும். இப்போது எதிர்க்கட்சிகள் தனித்தனியாக நின்றிருப்பது ஆளும் தவெகவிற்கே சாதகமாக அமைந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications
