ஆட்டத்தை மாற்றும் திருப்பூர்.. கேம் சேஞ்சராக மாறும் ஐரோப்பா.. 9 லட்சம் கோடி ஏற்றுமதி உறுதி?
திருப்பூர்: பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியாவின் பின்னலாடை மையமான திருப்பூர் தனது அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தயாராகி வருகிறது. இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய பூஸ்ட் ஆக பார்க்கப்படும் நிலயில் , 2030-ஆம் ஆண்டிற்குள் ஐரோப்பாவிற்கு ஆடை ஏற்றுமதியில் 10 பில்லியன் டாலர் என்ற இலக்கை அடைய ஏற்றுமதியாளர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
சென்னையில் நேற்று 5-வது தேசிய ஏற்றுமதி போட்டித்திறன் உச்சி மாநாடு நடந்தது. திருப்பூரின் ஜவுளித்துறை வளர்ச்சி குறித்து முக்கிய அறிவிப்புகள் நேற்றைய மாநாட்டில் வெளியாகியது. இதன்படி 2030-ஆம் ஆண்டிற்குள் ஆடை ஏற்றுமதியில் 10 பில்லியன் டாலர் ஈட்டுவதை திருப்பூர் இலக்காகக் கொண்டுள்ளது. இந்தியாவின் மொத்த ஆடை ஏற்றுமதியான 16 பில்லியன் டாலரில், திருப்பூரின் பங்களிப்பு மட்டும் 5.2 பில்லியன் டாலர் (சுமார் 33%) ஆகும்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம்
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) திருப்பூரின் ஏற்றுமதி வாய்ப்புகளைப் பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் ESG (சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம்) விதிகளில் திருப்பூர் உலகளவில் முன்னோடியாகத் திகழ்வது அதன் போட்டித்திறனை அதிகரித்திருக்கிறது. தற்போது விளையாட்டு ஆடைகள் (Athleisure) மற்றும் செயற்கை இழை ஆடைகள் உற்பத்தியில் திருப்பூர் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறது.
மூன்றில் ஒரு பங்கு
ஈஸ்டீ எக்ஸ்போர்ட்ஸ் இந்தியா லிமிடெட் (Esstee Exports India Ltd) தலைவரும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் செயலாளருமான என். திருக்குமரன் நேற்று தேசிய ஏற்றுமதி போட்டித்திறன் உச்சி மாநாடு 2026ல் பேசும் போது, "2030-ஆம் ஆண்டிற்குள் ஆடை ஏற்றுமதியில் 10 பில்லியன் டாலர் என்ற லட்சிய இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம். தற்போது இந்தியாவின் மொத்த ஆடை ஏற்றுமதி சுமார் 16 பில்லியன் டாலராக உள்ளது, இதில் திருப்பூரின் பங்களிப்பு மட்டும் சுமார் 5.2 பில்லியன் டாலர் ஆகும். இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் தோராயமாக மூன்றில் ஒரு பங்கு.
100 பில்லியன் டாலர்
2030-ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் டாலர் ஜவுளி ஏற்றுமதி என்ற பரந்த இலக்கின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி ஆடை ஏற்றுமதிக்கு 40 பில்லியன் டாலர் தேசிய இலக்கை நிர்ணயித்துள்ள நிலையில், இதில் திருப்பூர் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.
கேம் சேஞ்சர்
ஐரோப்பா ஒரு "முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியாக" இருக்கும் என்று ஏற்றுமதியாளர்கள் நேற்றைய மாநாட்டில் நம்பிக்கையுடன் பேசினார்கள். இந்தியா ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற வளைகுடா நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள நிலையில், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான வரி இல்லாத அணுகல், போட்டி நாடுகளுக்கு எதிராக திருப்பூரின் போட்டித்திறனை கணிசமாக மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதி வாய்ப்பு
சில ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தைக்கான கதவுகளைத் திறந்து, ஏற்றுமதி வாய்ப்புகளைப் பலமடங்கு அதிகரிக்கும் என்று தொழில் துறை பிரதிநிதிகள் நேற்றைய மாநாட்டில் குறிப்பிட்டனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், திருப்பூரின் தனித்துவமான அம்சம் அதன் 'கிளஸ்டர் நிலை' (Cluster-level) நிலைத்தன்மை கட்டமைப்பு. மற்ற உலகளாவிய ஆடை மையங்களில் விதிமுறைகளை பின்பற்றுவது தனிப்பட்ட நிறுவனங்களுடன் முடிந்துவிடும் நிலையில், திருப்பூர் பொதுவான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பகிரப்பட்ட ESG (சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம்) உள்கட்டமைப்புகளை இயக்குகிறது.
சுற்றுச்சூழல் விதிகள்
இதனால், வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக வெளிப்படைத்தன்மை விதிமுறைகளுடன் ஒத்துப்போகும் உலகின் ஒரு சில மையங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. நிலைத்தன்மை என்பது வணிகம் செய்வதற்கான ஒரு அடிப்படைத் தேவையாக மாறி வருவதால், இந்த சாதகமான அம்சம் மேலும் முக்கியத்துவம் பெறும் என்றார்கள்..
திருப்பூர் கிளஸ்டர்
திருப்பூர் கிளஸ்டர் தனது வளர்ச்சி உத்தியை செயற்கை இழை ஆடைகள் (Man-made fibre garments), விளையாட்டு ஆடைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளை நோக்கி மாற்றி வருகிறது, இது உலகளாவிய சந்தை விருப்பங்களுக்கு தகுந்தாற்போல் ஆடைகள் தயாரிக்கப்படுவது தெரியவந்துள்ளது..
செயற்கை இழை
செயற்கை இழை விநியோகச் சங்கிலியில் உள்ள சவால்களை திருப்பூர் தொழில் துறைத் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர், இருப்பினும் தமிழ்நாட்டில் 'லையோசெல்' போன்ற இழை உற்பத்தித் துறையில் மேற்கொள்ளப்படும் புதிய முதலீடுகள் போட்டித்திறனை வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். மூலப்பொருட்களின் தடையற்ற மற்றும் நியாயமான இருப்பு மற்றும் தொழிலாளர்களின் இடப்பெயர்வு ஆகியவை தொழில்துறைக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று டெக்னோ ஸ்போர்ட்ஸ்வேர் பிரைவேட் லிமிடெட் இணை நிறுவனர் சுனில் ஜுன்ஜுன்வாலா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications