25 கிலோ அரிசி பாக்கெட் பாக்கிங்.. இதுக்கு கூடவா 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி! திருப்பூர் வணிகர்கள் கோரிக்கை
திருப்பூர்: 25 கிலோ மற்றும் அதற்கு கீழ் பேக்கிங் செய்யும் அரிசிக்கு விதித்துள்ள, 5 சதவீத ஜி.எஸ்.டி வரியை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதை தவிர, மேலும் சில முக்கிய கோரிக்கைகளையும் அச்சம்மேளனம் அரசுக்கு விடுத்துள்ளது.
2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை அமலுக்கு கொண்டுவரப்பட்டது. அதில், அத்தியாவசிய உணவு பொருட்கள் அனைத்திற்கும் வரி விலக்கு முழுமையாக அளிக்கப்பட்டது.

எனினும், காலப்போக்கில் பிராண்டிங் செய்யப்பட்ட, பேக்கேஜ் செய்யப்பட்ட சில உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பதாக அறிவித்தது.
பாக்கெட்கள் அரிசி
பிறகு நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேக்கேஜ் செய்யப்பட்ட தயிர், லஸ்ஸி மற்றும் மோர் பால் உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இந்த பொருட்களுக்கு இதற்கு முன்பு ஜிஎஸ்டி வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது..
உணவுப்பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. வர்த்தகர்கள் உட்பட பல தரப்பினரும் ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
25 கிலோ அரிசி
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் சொல்லும்போது, "25 கிலோ அரிசி மற்றும் அதற்கும் கீழுள்ள பேக்கிங் செய்யப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி விரியை விதிக்கிறது. இதனால் ஒரு கிலோ அரிசி கூடுதலாக சேர்த்து 26 கிலோ அரிசி பையாக விற்க வேண்டியிருக்கிறது.
கூடுதல் ஒரு கிலோவுக்கும் சேர்த்தும் பணம் வசூலிப்பதால் அரிசி விலை உயர்ந்திருக்கிறது.. இதுபோக, இடுபொருள், வேளாண் உபகரணங்கள் பயன்பாடு, போக்குவரத்து செலவு, மின்கட்டண உ,யர்வு, உள்ளாட்சி வரி போன்றவற்றாலும் அரிசி விலை உயர்வை தவிர்க்க முடியாத சூழல் உள்ளது. எனவே இனி அரிசியின் விலை குறையும் என்றும் எதிர்பார்க்க முடியாது
தவிட்டு 5 சதவிகித ஜிஎஸ்டி
நம்முடைய தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் மட்டுமே அரிசிக்கு ஜிஎஸ்டி வரி உள்ளது. அதனால் அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
தவிட்டுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரிசை ரத்து செய்ய வேண்டும், நெல்லுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டுமே சந்தை கட்டணம் வசூல் செய்ய வேண்டும், விவசாயிகளிடம் நேரடியாக செஸ் வரி செய்ய வசூலிக்க கூடாது. அத்தியாவசிய உணவு பொருட்கள் மீதான 5 சதவிகித வரியை திரும்ப பெற வேண்டும்" என்றெல்லாம் கோரிக்கைகளை விடுத்தபடியே உள்ளனர்.
இதே கோரிக்கைகளை அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனம் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது.. இச்சம்மேளனத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நேற்று நடைபெற்றது.. கூட்ட தீர்மானங்களை விவரித்து, மாநில தலைவர் துளசிங்கம் சொன்னதாவது:
கட்டணம் வசூல்
"தமிழகம் அரிசி உணவை அதிகம் உட்கொள்ளும் மாநிலம். சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 25 கிலோ மற்றும் அதற்கு கீழ் பேக்கிங் செய்யும் அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள ஐந்து சதவீத வரி ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்த்து இருந்தோம் .
ஆனால், அறிவிப்பு வெளியாகாதது வருத்தம் அளிக்கிறது. இந்த வரியை ரத்து செய்ய வேண்டும். வேளாண்மை துறை அதிகாரிகள், அரிசி ஆலைகள் நேரடியாக விவசாயிகளிடம் வாங்கும் நெல்லுக்கும், வெளிமாநிலத்தில் இருந்து வாங்கும் நெல்லுக்கும் சந்தை கட்டணமாக, 1 சதவீதம் வசூலிப்பது ஏற்புடையதல்ல. இதை நீக்க வேண்டும்.
எண்ணெய் ஆலைகளுக்கு, அரிசி ஆலைகளில் இருந்து அனுப்பும் தவிட்டுக்கு, 5 சதவீதம் வரி விதிப்பதையும் திரும்ப பெற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications