எனக்கு வழி காட்டியவர் விஜய்! என் உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும்.. அழுத செங்கோட்டையன்
திருப்பூர்: வழி தெரியாமல் இருந்த எனக்கு வழி காட்டியவர் தவெக தலைவர் விஜய், என் உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் அவருக்காகத்தான் என கண்ணீர் விட்டபடி செங்கோட்டையன் நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க அரங்கில் நடந்தது. அப்போது தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் பலர் தவெகவில் இணைந்தனர்.

அப்போது செங்கோட்டையன் பேசுகையில், அரசியல் கட்சிகளுக்கு கூட்டம் வரும், ஆனால் வேகம் இருக்காது. ஆனால் ஆர்ப்பரிக்கும் இந்த கூட்டம் தவெக தலைவர் விஜய் முதல்வராக வரவ வேண்டும் என கூடுகிறது. பெரும்பான்மை அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வருபவர்கள் 1 அல்லது 2 மணி நேரத்தில் எழுந்து சென்று பாதி நாற்காலிகள் காலியாக இருக்கும்.
ஆளும் கட்சி
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தேவையில்லை. நமது தலைவர்தான் முதல்வராக வேண்டும் என இளைஞர்கள் பொதுக் கூட்டங்களுக்கு வருகிறார்கள். இந்த கூட்டத்தை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த கூட்டத்தை பார்த்து ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என்ற அச்சத்தில் உள்ளனர்.
ஆள் தேடுவார்கள்
அவர்கள் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு தேர்தலில் போட்டியிட ஆள் தேடுவார்கள். வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் வெல்லும். ஆண்டுக்கு ரூ 1000 கோடி சம்பாதிப்பவர் அந்த பணத்தை வேண்டாம் என சொல்லிவிட்டு மக்கள் நலன்தான் முக்கியம் என வந்துள்ளார்.
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா
விஜய் மலேசியாவில் நடக்கும் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றிருக்கிறார். இதை காண பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். இதற்காக உலக நாடுகளில் இருந்து நிறைய பேர் அங்கு சென்றுள்ளார்கள்.
வெற்றியின் சின்னம்
ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் படம் வெளியாக போகிறது. அது வெற்றியின் சின்னம்! அதன் பிறகு யாருமே வாயே திறக்க முடியாது. அந்த படம் வெளியாகும் போது இப்படி ஒரு திரைப்படமா, இப்படி ஒரு மாற்றமா என்பதை தமிழகத்தில் நாம் எல்லாம் காணப் போகிறோம்.
தட்டுங்கள் திறக்கப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என ஏசுபிரான் சொன்னார். "இறைவனிடம் கையேந்துங்கள், அவரை இல்லை என்று சொல்வதில்லை" என முஸ்லீம் சமூகத்தினரின் நம்பிக்கை. அது போல் "கேட்பதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா" என்று இந்து மதத்தினர் சொல்வார்கள். கேட்காமலேயே தோன்றியிருக்கும் தலைவர்தான் நமது தளபதி விஜய் என இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
வெற்றி தளபதி
தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெற்றித் தளபதி கிடைத்திருக்கிறார். வழித் தெரியாமல் இருந்த எனக்கு வழிகாட்டியவர் விஜய் (அழுகிறார் செங்கோட்டையன்). நான் இன்றைக்கு சொல்கிறேன். என் உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் அவருக்காகத்தான். நான் ஜெயலலிதா அம்மாவுடன் பயணித்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. நான் ஒருவரை (எடப்பாடி பழனிசாமி)அடையாளம் காட்டினேன், நான் அடையாளம் காட்டியவர்தான் இறுதியில் என்னை அடையாளம் காட்டிவிட்டு சென்றுவிட்டார்.
எனக்கு அடையாளம் காட்டிய இபிஎஸ்
கவலைப்படத் தேவையில்லை. நல்ல இடத்திற்கு நீங்கள் போங்கள் என எனக்கு அவர் (எடப்பாடி) அடையாளத்தை காட்டியிருக்கிறார், அதற்காக நான் அவருக்கு மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரோடு இருந்திருந்தால் என்னை இன்னும் பின்னுக்கு தள்ளியிருக்க முடியும். ஆனால் விஜய் என்னை முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். அதற்கு கோடானு கோடி நன்றிகள் என தெரிவித்தார். அப்போது கட்சியினர் "அண்ணன் செங்கோட்டையன் வாழ்க" என ஆரவாரம் செய்தனர்.












Click it and Unblock the Notifications