திருப்பூர் சாமளாபுரம் குளத்தில் ஆச்சரியத்தை பாருங்க.. திமுகவை சீண்டிய இந்து முன்னணி.. என்ன காரணம்?
திருப்பூர்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் விஜர்சன ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் 36ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வல நிறைவு விழா பொதுக் கூட்டம் திருப்பூர் ஆலங்காடு பகுதியில் வியாழக்கிழமை நடந்தது.

இந்த கூட்டத்திற்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தில் தங்கள் வீட்டு வாசலில் உட்கார்ந்து ஏன் மது அருந்துகிறீர்கள் என கேட்ட ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாதத்தில் மட்டும் 52 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் 1052 கொலைகள் நடந்துள்ளதாகவும் காவல் துறை அறிக்கை கூறுகிறது. போதை கலாச்சாரத்தின் காரணமாகவே சட்டம் ஒழுங்கு மோசமடைந்தது. தமிழக அரசின் கைப்பாவையாகவே காவல் துறை மாறிவிட்டது. விநாயகர் சதுர்த்தி நாளில் புதிய நாடாளுமன்ற கட்டத்தில் கூட்டத் தொடர் நடந்து வருகிறது.
இந்த கூட்டத் தொடரில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்து முன்னணி அரசியல் கட்சி கிடையாது என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் பேசுகையில் ஒவ்வொரு வீட்டிலும் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடி வருகிறோம்.
இந்த விழாவை எப்படி கொண்டாட வேண்டும் என ஔவை பாட்டி சொல்லிக் கொடுத்துள்ளார். ஔவையார் மட்டும் இல்லாவிட்டால் இந்த அளவுக்கு விநாயகர் வழிபாடு வந்திருக்காது என தெரிவித்திருந்தார். இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலமானது திருப்பூர் தெற்கு பகுதியில் தொடங்கி பொதுக் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தது.
இதையடுத்து மேற்கு பகுதி ஊர்வலமும் பல்வேறு இடங்களை தாண்டி ஆலங்காட்டிற்கு வந்தது. இந்த இந்து முன்னணி பொதுக் கூட்டம் நடந்தவுடன் 1000- க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை சாமளாபுரம் குளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications