"படார்" என கேட்ட வினோத வெடி சத்தம்.. வானத்தில் புகைமூட்டம்.. அதிர்ந்த கூரைகள்! திருப்பூரில் பரபர
திருப்பூர்: தாராபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் மிகப் பெரிய வெடிச் சத்தம் கேட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று காலை மிகப்பெரும் வெடிச் சத்தம் கேட்டுள்ளது. இந்த வெடிச் சத்தம் வெள்ளகோவில், முத்தூர், காங்கேயம் என 30 கிலோமீட்டர் சுற்றளவிற்குக் கேட்டுள்ளது.

காலை 10 மணிக்குக் கேட்ட இந்த வெடிச் சத்தம், வானத்தில் விமானம் வெடித்துச் சிதறுவது போல் கேட்டுள்ளது. சில இடங்களில் வீடுகளின் மேற்கூரைகளில் அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
அந்தச் சமயத்தில் வானில் மேகத்தைக் கிழித்துக்கொண்டு விமானம் ஒன்று சென்றதற்கான வட்டவடிவிலான அடையாளமும் தென்பட்டுள்ளது. இதனால் விமான விபத்து ஏற்பட்டது எனப் பொதுமக்கள் இடையே வதந்தி பரவியது.
திருப்பூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள சூலூர் விமானப்படைத் தளத்தில் சூப்பர்சோனிக் விமானங்களைக் கொண்டு விமானப்படையினர் அவ்வப்பொழுது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வகை சூப்பர்சோனிக் விமானங்களை இயக்கும் பொழுது மிகப்பெரும் சப்தம் எழுந்து வருகிறது. இந்த சப்தமே தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கேட்டுள்ளது.












Click it and Unblock the Notifications