‛எம்ஜிஆருக்கு பின் நல்லாட்சி தந்தவர் ஜெயலலிதா தான்’.. புகழ்ந்த பிரதமர் மோடி.. அதிமுக ஓட்டுக்கு குறி
திருப்பூர்: திருப்பூரில் ‛என் மண் என் மக்கள்' பாதயாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் மறைந்த தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவை பிரதமர் மோடி புகழ்ந்து பேசினார். ஜெயலலிதா பற்றி அவர் பேசியபோது, ‛எம்ஜிஆருக்கு பிறகு தமிழகத்தில் நல்லாட்சி தந்தவர் ஜெயலலிதா தான்' எனக்கூறினர். மேலும் தனக்கும், ஜெயலலிதாவுக்குமான பந்தம் பற்றி அவர் விளக்கி கவனம் ஈர்த்தார்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவினர் தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தான் யாத்திரையின் இறுதி நிகழ்வு இன்று திருப்பூர் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் மோடியும் நேரில் பங்கேற்பதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து இன்று பிரதமர் மோடி கேரளாவில் இருந்து தமிழகம் வந்தார்.
கோவை சூலூர் விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி இன்று மதியம் வந்திறங்கினார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி சென்றார். அதன்பிறகு திருப்பூர் மாவட்டம் பாதப்பூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இந்த வேளையில் தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். திமுக தமிழகத்துக்கான வளர்ச்சி திட்டங்களை செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.
மாறாக இந்த பொதுக்கூட்டத்தில் மறைந்த அதிமுக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பற்றி புகழ்ந்து பேசினார். ஜெயலலிதா பற்றி பிரதமர் மோடி பேசியதாவது:
தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு யாராவது ஒருவர் நல்லாட்சி கொடுத்து இருப்பார்கள் என்றால் அது அம்மா ஜெயலலிதா மட்டும் தான் என்று என்னால் சொல்ல முடியும். தமிழக மக்கள் நலனுக்காக முழு வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அவர் என்று சொல்ல முடியும். சிறிது நாட்களுக்கு முன்பு தான் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இந்த மண்ணில் இருந்து மீண்டும் ஒருமுறை ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஜெயலலிதாவுடன் பல்லாண்டு காலம் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. தமிழக மக்களுடன் எப்படி தன்னை தொடர்புப்படுத்தி வாழ்ந்தார் என்பதை அனைவரும் அறிவோம். எம்ஜிஆர் கொள்கைகளை கடைப்பிடித்து மக்களுக்காக செயல்பட்டவர் ஜெயலலிதா. இதனால் தான் ஜெயலலிதா அனைத்து வீடுகளிலும் நினைவுப்படுத்தப்படுகிறார்'' என்றார்.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்தன. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் பாஜகவை அதிமுக தனது கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டுள்ளது. மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என அதிமுக தலைவர்கள் உறுதியாக கூறியுள்ளனர். இந்நிலையில் தான் பிரதமர் மோடி எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். இதன்மூலம் அதிமுக ஓட்டுகளை குறிவைத்து அவர் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications