திருப்பூர் செருப்புக்கடை ஊழியர் 28 வயதில் இப்படியொரு முடிவு.. பல்லடம் மேம்பாலத்தில் நடந்தது என்ன?
திருப்பூர்: திருப்பூரில் மத்திய பஸ் நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும். இந்த பேருந்து நிலையத்தின் எதிரே, பல்லடம் சாலையில் மேம்பாலம் இருக்கிறது. நேற்று காலை 8 மணி அளவில் செருப்புக்கடை ஊழியர் ஒருவர் மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் எடுத்த தவறான முடிவு பற்றி பார்ப்போம்.
வாழ்க்கையில் எதிர்பாராத பல விஷயங்களை நிறைய பேர் சந்தித்து இருப்பார்கள். அவர்களால் நம்பவே முடியாத ஏமாற்றமாக இருந்தால், வாழ்க்கையில் தவறான முடிவெடுக்கிறார்கள். அப்படி எடுக்கும் தவறான முடிவால் எதையும் மாற்ற முடியாது என்பதை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். எளிதாக தவறான முடிவெடுத்து வாழ்க்கையில் இருந்து விடைபெறுகிறார்கள். ஆனால் அவர்களை நம்பி உள்ளவர்களுக்கு பெரும் வேதனையாக முடிகிறது. அப்படியான ஒரு முட்டாள்தனமான முடிவினை கோவையைச் சேர்ந்த இளைஞர் திருப்பூரில் எடுத்துள்ளார்.

திருப்பூரில் மத்திய பஸ் நிலையம் மிகவும் பிஸியாக இருக்கும். நேற்று 8 மணி அளவில் ஒரு இளைஞர் நடந்து சென்றுள்ளார். பின்னர் பஸ் நிலையத்தின் நுழைவுவாயில் எதிரே, மேற்குபுறம் பல்லடம் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் அவர் ஏறினார். அதன்பிறகு கண் இமைக்கும் நேரத்தில் பாலத்தில் இருந்து கீழே குதித்து விட்டார். சுமார் 40 அடி உயரத்தில் இருந்து அந்த வாலிபர் குதித்ததில் உயிரிழந்தார். இதனைக்கண்டு அந்த வழியாக சென்ற மக்கள், பஸ்நிலையத்தில் இருந்த பயணிகள் ஆடிப்போனார்கள்.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த வாலிபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இதற்கிடையே வாழ்க்கையை முடித்துக் கொண்ட வாலிபரின் பையில் செல்போன் ஒன்று இருந்தது. அந்த செல்போனும் சேதமாகியிருந்தது.
அந்த செல்போனை பயன்படுத்தி விசாரணையை முடுக்கி விட்டனர். அதாவது உடைந்து போன செல்போனில் இருந்த சிம்கார்டை எடுத்து, மற்றொரு செல்போனில் பொருத்தி, அதில் இருந்த நம்பரில் ஒருவருக்கு தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த இளைஞர் கோவை குனியமுத்தூரை சேர்ந்த அப்துல் நாசர் என்பவரின் மகன் முகமது பயாஸ் (வயது 28) என்பது தெரியவந்தது. இவர், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருப்பூர் வந்து, மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள செருப்புக்கடையில் ஊழியராக பணியில் சேர்ந்துள்ளார். அந்த கடையில் வேலை செய்யும் ஊழியர்கள், திருப்பூர் கோம்பைத்தோட்டம் பகுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அங்கு முகமது பயாசும் தங்கியிருந்து தினமும் செருப்புக்கடைக்கு வேலைக்கு சென்று வந்தார்.
வாழ்க்கையை முடித்துக் கொண்ட முகமது பயாசின் தாய், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தனது தாயார் இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்தார். இந்தநிலையில் தான், நேற்று காலை வழக்கம் போல் கடைக்கு வேலைக்கு வந்த முகமது பயாஸ், வாழ்க்கையில் வெறுப்படைந்து மேம்பாலம் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். போக்குவரத்து நெரிசல் நிறைந்த மத்திய பஸ் நிலைய பகுதியில் மேம்பாலத்தின் மீது ஏறி கீழே குதித்து செருப்பு கடை ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications