திருப்பூரில் கட்டிட அனுமதி வழங்குவதில் தாமதம்.. 7 ஊராட்சி செயலாளர்களுக்கு சிக்கல்.. கலெக்டர் அதிரடி
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் 2024-25-ம் ஆண்டு 10 ஆயிரம் சதுர அடிக்கு உட்பட்ட மற்றும் 10 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கட்டிட அனுமதி இணையவழியாக வரப்பெற்ற விண்ணப்பங்களுக்கு அவ்வப்போது அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சில ஊராட்சி செயலாளர்கள், 30 நாட்கள் ஆகியும் அனுமதி வழங்காமல் நிலுவையில் விண்ணப்பங்களை வைத்திருந்தனர். இதையடுத்து கட்டிட அனுமதி வழங்குவதில் தாமதம் செய்த 7 ஊராட்சி செயலாளர்களை பணிவிடுவிப்பு செய்து திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் 2500 சதுர அடி வரையிலான மனையில், 3,500 சதுர அடி வரையில் தரைத்தளம் அல்லது தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் எனக் கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களுக்கு சுயசான்று அடிப்படையில் இணைய வழி கட்டட அனுமதி வழங்கப்படுகிறது. இணையவழி கட்டட அனுமதி பெற http://www.onlineppa.tn.gov.in/ என்ற இணையதளத்தில விண்ணப்பித்தால் உடனே அனுமதி தரப்படுகிறது. விண்ணப்பதாரர் தரும் விவரங்களின் அடிப்படையில் அனுமதி உடனடியாக வழங்கப்படும். சம்பந்தப்பட்ட எந்த அலுவலகத்துக்கும் விண்ணப்பதாரர்கள் செல்ல வேண்டியதில்லை. கட்டடப்பணிகள் முடிந்ததும், முடிவுச்சான்று பெறுவதில் இருந்தும் விலக்களிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் 2024-25-ம் ஆண்டு 10 ஆயிரம் சதுர அடிக்கு உட்பட்ட மற்றும் 10 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கட்டிட அனுமதி இணையவழியாக வரப்பெற்ற விண்ணப்பங்களுக்கு அவ்வப்போது அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆகியோர் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் சில ஊராட்சி செயலாளர்கள், 30 நாட்கள் ஆகியும் அனுமதி வழங்காமல் நிலுவையில் விண்ணப்பங்களை வைத்திருந்தனர்.
குறிப்பாக அவினாசி ஒன்றியத்தில் புதுப்பாளையம் ஊராட்சி, குண்டடம் ஒன்றியத்தில் சூரியநல்லூர் ஊராட்சி, பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சி, பொங்கலூர் ஒன்றியத்தில் தெற்கு அவினாசிபாளையம், வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சி, மடத்துக்குளம் ஒன்றியம் ஜோத்தம்பட்டி ஊராட்சி, உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சி ஆகிய 7 ஊராட்சிகளில் பணியாற்றிய ஊராட்சி செயலாளர்கள் உரிய காலத்துக்குள் கட்டிட அனுமதி வழங்காமல் விண்ணப்பங்களை நிலுவையில் வைத்திருந்தனர். அவர்களை உடனடியாக பணியில் இருந்து விடுவிப்பு செய்ய திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.
உரிய நாட்களுக்குள் பொதுமக்களுக்கு கட்டிட அனுமதி வழங்காமல் காலதாமதம் ஏற்படுத்தியும், திருப்பூர் மாவட்டத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்திய 7 ஊராட்சி செயலாளர்களை பணியில் இருந்துவிடுவித்து, அவர்களுக்கு பதிலாக தகுதியான ஊராட்சி செயலாளர்களை கூடுதல் பொறுப்பாக நியமித்து வரியினங்களை வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மேற்கண்ட ஏழு ஊராட்சி செயலாளர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்து அதன் அறிக்கையையும் அனுப்பி வைக்க திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications