ரிதன்யா மாமியார் சித்ரா தேவிக்கு ‘ஷாக்’ கொடுத்த நீதிமன்றம்.. ஜாமீன் மனு தள்ளுபடி!
திருப்பூர்: ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து திருப்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா. இவர்களது செல்ல மகள் ரிதன்யா (27). ரிதன்யாவுக்கும் திருப்பூரைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி - சித்ராதேவி தம்பதியின் மகன் கவின்குமார் (28) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், சேயூர் அருகே மொண்டிபாளையம் செல்லும் வழியில் சாலையோரம் காருக்குள் ரிதன்யா விஷம் அருந்தி கடந்த ஜூன் 28-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் தனது தந்தைக்கு ரிதன்யா அனுப்பிய ஆடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கணவர் வீட்டாரின் வரதட்சணைக் கொடுமை மற்றும் கணவர் கவின்குமார் உடல்ரீதியாக ரிதன்யாவை கொடுமைப்படுத்தியதால் மனமுடைந்த ரிதன்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, கணவர் கவின்குமார், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ஆனால், கவின்குமாரின் தாய் சித்ராதேவியை போலீசார் கைது செய்யவில்லை. அவரது உடல்நிலை காரணமாக வீட்டிலேயே இருந்தார்.
ரிதன்யா வீட்டாரின் தொடர் அழுத்தம் காரணமாக கவின்குமாரின் தாய் சித்ராதேவியும் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவி கைது செய்யப்படுவதற்கு முன்பே, ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமீன் கோரி திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என ரிதன்யா பெற்றோர் இடையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தனர். ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பலமாக உள்ள கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ரிதன்யாவை உடல்ரீதியாக கணவர் கவின்குமார் கடுமையான சித்ரவதைகளைச் செய்துள்ளார். இது தெரிந்து அவர்களது பெற்றோர் கண்டிக்கவில்லை என ரிதன்யா தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கவின்குமார், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், சித்ராதேவியும் ஜாமீன் கோரி திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ரிதன்யாவின் தந்தை சார்பில் ஜாமீன் வழங்கக்கூடாது என்று இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ரிதன்யா மாமியாரின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது.
சித்ராதேவி தரப்பில் அவரது மருத்துவச் சான்றுகள் வழங்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதி குணசேகரன், சித்ராதேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஏற்கனவே கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications