திருப்பூரின் பல வருட கனவு.. நியூசிலாந்தால் நடக்கும் மிகப்பெரிய நல்ல விஷயம்
திருப்பூர்: இந்தியா-நியூசிலாந்து இடையே கையெழுத்தான ஒப்பந்தம் இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய ஊக்கமாக அமைய உள்ளது. இதனால் நியூசிலாந்து சந்தையில் 100 சதவீதம் வரி இல்லாமல் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய முடியும். வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் என்பதால் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி இருமடங்காக உயரும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தியா-நியூசிலாந்து இடையேயான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய ஊக்கமக அமைந்த உள்ளது. இதனால் நியூசிலாந்து சந்தையில் 100 சதவீதம் வரி இல்லாமல் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய போகிறது. நியூசிலாந்து ஆண்டுக்கு 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்து வருகிறது. எனவே இந்தியாவில் ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி துறையில் ஏராளமான புதிய வேலைகள் உருவாகும்.

நியூசிலாந்தில் இதுவரை ஆயத்த ஆடையில் இந்தியாவின் பங்கு 4.4 சதவீதமாகும். இனி வரி இல்லை என்பதால் காட்டன், டி-சர்ட்டுகள், சட்டைகள், நிட்வேர் மற்றும் பிற ஆடைகளின் முக்கிய பிரிவுகளில் இந்தியாவின் பங்களிப்பை அதிகப்படுத்த அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் நியூசிலாந்துக்கான இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 2 மடங்கு அளவுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதிகரிக்க போகிறது. பருத்தி ஆடைகள் உற்பத்தி மேம்படுவதுடன் செயற்கை இழை ஆடைகளுக்கான வாய்ப்பும் அதிகரிக்கும் என்பது தான் சிறப்பு அம்சம். இதனிடையே சந்தை விரிவாக்கம், திறன் மேம்பாடு, ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (ஏ.இ.பி.சி.) தனது ஆதரவை வழங்கும் என்று ஏற்றுமதி சங்க தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியா-நியூசிலாந்து இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறுகையில், "நியூசிலாந்துடன் சராசரியாக 4.19 சதவீதம், அதிகபட்சமாக 10 சதவீதம் வரை ஏற்றுமதிக்கான வரிகள் நீக்கப்படுகிறது. நியூசிலாந்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவால் சர்வதேச சந்தையில் இந்தியா வலிமையுடன் போட்டியிட முடியும்.
மேக் இன் இந்தியா தொலைநோக்கு பார்வையின் கீழ், இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி,பொருளாதார மேம்பாட்டு இலக்குகளை நிச்சயம் எட்ட முடியும. பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கும் ஆயத்த ஆடை துறை மிகுந்த பலன் அடையும். சந்தை விரிவாக்கம், திறன் மேம்பாடு, ஏற்றுமதி ஊக்க நடவடிக்கைகள் சங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும். இந்த ஒப்பந்தம் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு புதிய அத்தியாயத்தை தொடங்கும் என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஸ்டார்ட் அப் இந்தியா ஆலோசகர் ஜெயபிரகாஷ் கூறுகையில், இந்தியா நியூசிலாந்து இடையே வரியில்லா ஒப்பந்தம் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு புதிய கதவை திறக்கும். இந்தியாவில் தயாராகும் பல பொருட்களை நியூசிலாந்துக்கு குறைந்த வரி அல்லது வரியில்லாமல் அனுப்பி வைக்க முடியும். திருப்பூர் நகரம் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்த போகிறது. நியூசிலாந்து மக்கள், இயற்கையான பருத்தி, மறுசுழற்சி துணிகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆடைகள் தயாரிப்பை விரும்புகிறார்கள். இவை அனைத்தையும் திருப்பூர் கடைபிடிக்கிறது.
இதனால் நியூசிலாந்துக்கு குறைந்த விலையில் ஆடைகளை அனுப்பி வைக்கும்போது திருப்பூருக்கு கூடுதல் ஆர்டர்கள் இனி நிச்சயம் கிடைக்கும். திருப்பூர் தனது சொந்த பிராண்டுகளையும் நியூசிலாந்தில் விற்பனை செய்ய முடியும். இதனால் இளைஞர்கள், புதிய தொழில் முனைவோருக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். இதன் மூலமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆடை தயாரிப்பு மையமாக திருப்பூர் மாற போகிறது என்று நம்பிக்கை தெரிவித்தார்..












Click it and Unblock the Notifications