மட்டன் பிரியாணியில் விழுந்த "மண்".. அப்பதான் வாயில் வெச்சாரு திருப்பூர் சதீஷ்.. இப்படியும் நடக்குமா?
திருப்பூர்: ஒரே நாளில், வெவ்வேறு இடத்தில் 2 உயிர்கள் அநியாயமாக பறிபோயிருக்கின்றன.. திருப்பூர் போலீசார் 5 பேரை கைதுசெய்து விசாரித்து வருவதன் பின்னணி என்ன?
சென்னை தாம்பரத்தில் நேற்று ஒரு துயரம் நடந்துள்ளது.. 16 வயது மாணவன் தாரிஸ் என்பவர் தாம்பரம் பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வருகிறார். ஆனால், இவர் தீவிரமான சைவப்பிரியராம். அசைவ உணவை சாப்பிடுவதில்லை. இதற்காகவே வீட்டில் அசைவ உணவுகளை சமைப்பது கிடையாதாம்.

பிரியாணி: நேற்று முன்தினம் பக்ரீத் என்பதால், அருகிலிருக்கும் நண்பர்கள் இவர்கள் வீட்டிற்கு பிரியாணி தந்துள்ளார்கள்.. அந்த பிரியாணியை தாரிஸின், தம்பி கோகுல் வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளார். இதைப்பார்த்ததும் தாரிசுக்கு ஆத்திரம் வந்துள்ளது. இதுவே அண்ணன் தம்பிக்குள் தகராறாக வெடித்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தாரிஸ், தன்னுடைய ரூமுக்குள் கதவை பூட்டி தற்கொலையே செய்துகொண்டார்.
பிரியாணியால் ஒரு உயிர் அநியாயமாக போய்விட்ட அதிர்ச்சியில் தாம்பரம் திகைத்து கொண்டிருக்கிறது. இப்போது இன்னொரு சம்பவமும் திருப்பூரில் நடந்து அதற்கு மேல் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
பேக்கரி வாசல்: திருப்பூர் கோல்டன் நகர் கருணாகரபுரி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார்.. 30 வயதாகிறது.. இவர் பனியன் நிறுவன தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் சாயங்காலம் வீட்டுக்கு அருகே உள்ள பேக்கரியில் டீ குடித்துவிட்டு, அந்த பேக்கரி வாசலிலேயே உட்கார்ந்திருந்தார்.. அப்போது திடீரென 5 பேர் அங்கு வந்து, சதீஷ்குமாரை அரிவாளால் வெட்டி சாய்த்துவிட்டார்கள்.
ரத்த வெள்ளத்திலேயே சதீஷ்குமார் அங்கேயே சரிந்துவிழுந்து இறந்துவிட்டார். மாலை நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து, அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். பிறகு போலீசார் விரைந்து வந்து, சடலத்தை மீட்டு விசாரணையையும் ஆரம்பித்தனர்..
டாஸ்மாக்: அப்போதுதான், இது ஒரு முன்விரோத கொலை என்பது தெரியவந்தது.. அதாவது, நேற்று முன்தினம் மதியம், திருப்பூர் கோல்டன்நகரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சதீஷ்குமார் நண்பர்கள் சிலருடன் பிரியாணி சாப்பிட்டிருக்கிறார்.. அப்போது அந்த வழியாக பாலா என்பவர், தன்னுடைய நண்பர்கள் நடந்து சென்றிருக்கிறார்.
அப்போது சதீஷ்குமார் சாப்பிட்ட பிரியாணியில் மண் விழுந்ததாக தெரிகிறது. இதனை சதீஷ்குமார் தட்டிக்கேட்டிருக்கிறார்.. மண் விழுந்த பிரியாணியை எப்படி சாப்பிடுவது என்றும் கேட்டுள்ளார்.
வாக்குவாதம்: உடனே பாலாவும், அவரது நண்பர்களும், மட்டன் பிரியாணியில் எச்சில் துப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு பிறகு இரு தரப்பினருமே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. தகராறு வரை விவகாரம் சென்றநிலையில், அங்கிருந்து அனைவருமே கலைந்து சென்றுவிட்டார்கள்.
ஆனாலும் பாலாவுக்கு கோபம் தணியவில்லையாம்.. எனவே, சிறிது நேரத்தில், பாலா உள்பட 5 பேர் கொண்ட கும்பல் சதீஷ்குமாரை தேடி வந்திருக்கிறார்கள்.. அப்போதுதான் பேக்கரி வாசலில் டீ குடித்துவிட்டு உட்கார்ந்திருந்த சதீஷ்குமாரை வெட்டி சாய்த்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.. ஆனால் அதற்குள் 27 வயதுடைய பாலா என்கிற பாலகிருஷ்ணன் தலைமறைவாகிவிட்டார்..
பிரியாணி: அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.. விரைந்து சென்ற போலீசார், பாலா உட்பட சக்தி சண்முகம் (26), பாண்டியராஜன் (25) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். ஒரே நாளில் வெவ்வேறு இடத்தில் விலைமதிக்க முடியாத உயிர் பறிபோயிருக்கின்றன.. அதுவும் பிரியாணியால் நடந்த இந்த துயரம் பொதுமக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications