திருப்பூர் அருகே அரசு பள்ளியில் அட்மிஷனையே நிறுத்தும் அளவுக்கு ஆர்வம் காட்டிய பெற்றோர்
திருப்பூர்: பொதுவாகவே அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவாகவே இருக்கும். ஆனால் ஒரு சில அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர்களே தவம் இருக்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் கூட சீட் கிடைக்கும். ஆனால் அரசு பள்ளியில் சீட் கிடைப்பது கடினம். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே சின்னவீரம்பட்டி அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளை சேர்க்க பெற்றோர் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். அங்கு அட்மிஷனையே நிறுத்தும் அளவிற்கு மக்கள் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.
இன்றைக்கு ஒவ்வொரு ஊரிலும் பிரபலமான தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க,அட்மிஷனுக்கு விண்ணப்பம் தரும் நாளில் அதிகாலையிலேயே தவம் இருக்கிறார்கள் பெற்றோர்கள். ஆனால் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே சின்னவீரம்பட்டி ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளின் 70 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் மாணவர் சேர்க்கையை பள்ளி நிர்வாகம் நிறுத்தி வைத்திருக்கிறது என்கிறார்கள் ஊர் மக்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் சின்னவீரம்பட்டி ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று 100ஆண்டுகளை கடந்து இயங்கி வருகிறது. இப்பள்ளி கடந்த 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பள்ளியாகும். இங்கு தற்போது மாணவர்களை சேர்க்க பெற்றோர் அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம். இதுபற்றி ஊர் மக்கள் சிலர் கூறுகையில், சின்னவீரம்பட்டி ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளியினை பொறுத்தவரை கடந்த 2012-ம் ஆண்டு வரை இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
அதன் பின் பொறுப்பேற்ற பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் முயற்சியுடன் தரமான கல்வி, தூய்மையான பள்ளி வளாகம், கழிவறை, கணினி ஆய்வகம், ஹைடெக் லேப், தமிழ் மற்றும் ஆங்கில வழி வகுப்புகள், அரசு அனுமதி உடன் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம் என பள்ளியின் செயல்பாடுகளே சூப்பராக மாறியது. இது இங்குள்ள மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
சின்னவீரம்பட்டி பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக மாறுவதற்கு உள்ளூர் மக்களும் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். பலர் நிதியுதவி அளித்துள்ளனர். சாமானிய மக்கள் பலர் உதவி செய்துள்ளனர். உதாரணமாக சின்னவீரம்பட்டியில் இளநீர் வியாபாரம் செய்து வரும் தாயம்மாள் (45), தனது சேமிப்பில் இருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை கட்டிட நிதிக்காக கடந்த 2022ம் ஆண்டு வழங்கி இருந்தார்.
இப்படி சின்னவீரம்பட்டி ஊராட்சியில் உள்ள மக்களும், சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களும் உதவியால் பள்ளிபெரிய அளவில் வளர்ந்தது. இதனால ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்து வருகிறார்கள். 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளில் இதுவரை 70 மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதன் மூலம் இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 700-ஆக அதிகரித்திருக்கிறது. வெறும் 150 என்கிற நிலையில் இருந்த மாணவர்கள் எண்ணிக்கை தற்போது இந்த அளவிற்கு உயர்ந்துள்ளதற்கு இப்போது தலைமை ஆசிரியராக உள்ள இன்பக்கனியும் காரணம் என்று மக்கள் கூறுகிறார்கள்.
தற்போது மக்கள்அதிக ஆர்வம் காட்டினாலும் பள்ளியில் உள்ள ஆசிரியர் மற்றும் வகுப்புகளின் எண்ணிக்கையை கருதி மழலையர் வகுப்புக்கான அட்மிஷன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனிடையே கல்வியாண்டு தோறும், அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை, கட்டமைப்பு மேம்பாடு, குழுக்கள் அமைத்தல், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் செயல்பாடு, மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்துதல், போட்டிகளில் மாணவர்களின் பங்களிப்பு உட்பட பல்வேறு தலைப்புகளில் பள்ளியின் தரம் ஆய்வு செய்யப்பட்டு, அப்பள்ளி தலைமையாசிரிருக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது, மாநில அரசின் சார்பில் வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில், 2022 - 23 கல்வியாண்டுக்கான விருது சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் இன்பகனிக்கு விருது வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications