திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் நெஞ்சு வலியால் மயங்கிய பயணி! முதலுதவி செய்து இதயத்தை இயங்க வைத்த எஸ்.ஐ.!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பேருந்து நிலையத்தில் நெஞ்சு வலியால் மயங்கிய நபருக்கு அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளர் முதலுதவி சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் பழனி என்பவர் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது திடீரென நெஞ்சை பிடித்தபடியே மயங்கி விழுந்தார்.

உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் காவல் உதவி ஆய்வாளர் கோபால் இருந்தார். அவரும் அங்கு கும்பலாக இருக்கிறதே என வந்து பார்த்தார். அப்போதுதான் பழனி நெஞ்சுவலியால் மயங்கி விழுந்தது தெரியவந்தது.
உடனே கோபால் சிபிஆர் எனப்படும் முதலுதவி சிகிச்சையை அளித்தார். தொடர்ந்து அவ்வாறு நெஞ்சு பகுதியில் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்ததால் உடனே இதயம் செயல்பட தொடங்கி ரத்த ஓட்டமும் சீரானது. இதையடுத்து அவரை தூக்கிக் கொண்டு திருப்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பழனியின் உடல் நிலை நன்றாக இருப்பதாகவும் அவர் இரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் பழனிக்கு சரியான நேரத்தில் மருத்துவ முதலுதவி சிகிச்சை அளித்ததால்தான் அவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதனால் கோபாலுக்கு பாராட்டுகள் குவிகின்றன. அவர் பழனி முதலுதவி செய்த வீடியோவும் வைரலாக பரவி வருகிறது. இது போல் பேச்சு மூச்சின்றி காணப்படும் எண்ணற்ற நபர்களை போலீஸ்காரர்கள் சிபிஆர் சிகிச்சை செய்து உயிர் கொடுத்த சம்பவங்கள் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அது போல் குரங்கு, பாம்பு உள்ளிட்ட உயிரினங்களுக்கும் இளைஞர்கள் சிலர் சிபிஆர் சிகிச்சை செய்து உயிர் பிழைக்க வைத்துள்ளனர். இந்த அடிப்படையான முதலுதவி சிகிச்சையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சிபிஆர் சிகிச்சை என்றால் என்ன? Cardio Pulmonary Resucitation ஆகும். இது இதய சுவாச முடக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மூளையின் செயலிழப்பை தடுக்கும். நமது மூளைக்கு தொடர்ச்சியாக 6 நிமிடங்களுக்குள் மேல் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால் நிரந்தரமாக கோமாவுக்கு செல்லும் நிலை ஏற்படும். மயங்கி விழுந்தவரை தரையில் படுக்க வைத்து இதய பகுதியில் உள்ளங்கைகளால் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்து கொண்டே இருந்தால் மயங்கி கிடப்பவர் மீண்டும் இதயம் இயங்கத் தொடங்கும். இந்த சிபிஆர் சிகிச்சை செய்துக் கொண்டிருக்கும் போதே 108 ஆம்புலன்ஸுக்கும் போன் செய்து வரவழைத்துவிட வேண்டும். அதற்குள் முதலுதவி சிகிச்சையில் இதயம் செயல்பட தொடங்கியதுமே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிடலாம்.












Click it and Unblock the Notifications