அடுத்து டார்கெட் இதுதான்.. தேர்தல் பணிகளை தொடங்கிய விஜய் மக்கள் இயக்கம்.. ரசிகர்கள் தந்த பேராதரவு
திருப்பூர்: கடந்த மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் குறிப்பிடத் தகுந்த வெற்றியைப் பெற்ற நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளையும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சத்தமில்லாமல் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்குக் கடந்த அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பாலான இடங்களை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே கைப்பற்றின.
மாவட்ட கவுன்சிலராக தேர்தலில் மொத்தமுள்ள 138 இடங்களில் திமுக கூட்டணி 138 தன்வசப்படுத்தியது. அதேபோல ஒன்றிய கவுன்சிலர் பதவிகளிலும் 1021 இடங்களில் திமுக வென்றது. அதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதில் படுதோல்வி அடைந்தன.

விஜய் மக்கள் இயக்கத்தினர்
அதேநேரம் இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அனைவருக்கும் மிகப் பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது விஜய் மக்கள் இயக்கத்தினர் பெற்ற வெற்றி தான். தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஆதரவுடன் கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர். அதில் போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் வெற்றி பெற்றனர்.

வைரல் படம்
முக்கிய எதிர்க்கட்சிகளே ஊரக உள்ளாட்சி தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்தித்த நிலையில், கட்சி ஆதரவு இல்லாமல் சுயேச்சையாக போட்டியிட்டு குறிப்பிடத்தகுந்த வெற்றியை விஜய் மக்கள் இயக்கத்தினர் பெற்றனர். மேலும் வெற்றி பெற்றவர்களை நேரில் அழைத்து வாழ்த்துக் கூறிய விஜய் அவர்களுடன் புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டார். இது அவரது அரசியல் வருகைக்கான முன்னோட்டமாக இருக்கலாம் எனப் பலரும் கருத்து தெரிவித்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
ஊரக உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் அரசு மிக விரைவில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளையும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சத்தமில்லாமல் தொடங்கியுள்ளனர். இன்னும் சில வாரங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களையும் விஜய் மக்கள் இயக்கத்தினர் நடத்தத் தொடங்கியுள்ளனர்.

ரசிகர்கள் பேராதரவு
அப்படி திருப்பூர் லட்சுமி நகர்ப் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் உள்ளாட்சித் தேர்தல் களப்பணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலின் போது பொதுமக்களை அணுக வேண்டிய விதம் மற்றும் வார்டு வாரியாக நிர்வாகிகள் களப்பணி மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும், இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஏராளமான ரசிகர்கள் ஆர்வமுடன் தங்கள் விருப்ப மனுக்களை அளித்தனர்.

திமுக
முன்னதாக திமுக சார்பிலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமான தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி நவம்பர் 21ஆம் தேதி முதல் திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக சார்பாக நகராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட விரும்புவோர் ரூபாய்.10,000 மற்றும் பேரூராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட விரும்புவோர் ரூபாய் 2500 விருப்ப மனு கட்டணமாகச் செலுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications