திருப்பூரில் கல்லை தூக்கி போட்டு ஆதரவற்ற பெண் கொலை.. கொடூர சைகோவுக்கு உடனே நடந்த விபத்து
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே ஆதரவற்ற மனநலம் பாதித்த பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே ஆதரவற்ற பெண்ணை கொலை செய்த அன்றிரவே சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே மழை நீர் வடிகால் பாதையில் அடையாளம் தெரியாத பெண் உயிரிழந்து கிடந்தார். இதுபற்றி அவிநாசி போலீஸாருக்கு நேரில் பார்த்தவர்கள தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அந்த பெண் யார் என்பது குறித்து விசாரித்தனர். விசாரணையில் அப்பெண் அவிநாசி மங்கலம் சாலை பகுதியில் சுற்றிவந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவினாசியில் கணேஷ் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் கடை வாசலில் இருந்து சடலம் கிடந்த இடம் வரை உடல் இழுத்துச் செல்லப்பட்டதற்கான இரத்தக் கறை இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அந்த எலக்ட்ரிகல் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை உடனடியாக ஆய்வு செய்த போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதில் பூட்டியிருந்த எலக்ட்ரிக்கல் கடை வாசலில் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, தலையில் துணியை சுற்றிக்கொண்டு வந்த இளைஞர் ஒருவர், அப்பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்கிறார். உடனடியாக பெண்ணின் காலை பிடித்து புதர் மறைவில் இருக்கும் நெடுஞ்சாலை மழைநீர் வடிகால் பாதைக்கு தரதரவென இழுத்துச் சென்று போடுகிறார்.
பின்னர் சுமார் அரை மணி நேரத்திற்கு பின் மீண்டும் எலக்ட்ரிக்கல் கடை முன் வந்து பார்த்துவிட்டு அங்கு அந்தப் பெண் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்த வழியே செல்வதாக காட்சிகள் இருந்தன.
இந்த சிசிடிவி காட்சியை கொண்டு அவினாசி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு தடையவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனர். கொலையாளி யார் என்பது குறித்தும், கொலை செய்த பின் அந்த பெண் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டாரா என விசாரித்தனர்.
போலீசாரின் விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் புஸ்பபுதூர் பகுதியைச் சேர்ந்த ஹில்டன் என்பவர் பெண்னை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஹில்டன் கடந்த இரண்டு மாதங்களாக அவிநாசி பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்திருக்கிறார். மது போதையில் ஆம்புலன்ஸ் ஓட்டியதற்காக பணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
இதையடுத்து அன்று இரவே சைகோ போல் சுற்றிய ஹில்டன், மனநலம் பாதித்த பெண்ணின் தலையில், கல்லை போட்டு கொடூரமாக தாக்கி கொலை செய்து கற்பழித்து விட்டு அவிநாசி-கோவை பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார்.
அப்போது அவிநாசி சீனிவாசபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பில் மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறர்கள். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிகிச்சைக்கு பின்னர் அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
