அண்ணாமலையை திராவிட கட்சிகள் சரியா டீல் பண்ணல.. தரமான பதிலடி அவசியம்.. சொல்வது திருப்பூர் துரைசாமி!
திருப்பூர்: அண்ணா பற்றி அண்ணாமலை பேசியதற்கு திராவிடக் கட்சிகள் சரியான பதிலடி கொடுத்திருக்க வேண்டும், திராவிட இயக்கங்கள் இந்த பிரச்சனையை சரியாக கையாளவில்லை என திருப்பூர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 11ஆம் தேதி சென்னையில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "1956 ல் மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கடுமையாக கண்டித்தார் மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்தார். அதற்கு பயந்து அண்ணாவும், பி.டி.ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர்" என்று பேசியிருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதிமுக முன்னணி தலைவர்கள் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர். ஆனால், அதற்கும் அசராத அண்ணாமலை, நான் வரலாற்றில் நடந்த சம்பவத்தையே கூறினேன், மன்னிப்பு கேட்க மாட்டேன் என உறுதியாகத் தெரிவித்தார். கூட்டணியில் இருக்கும் அதிமுக கட்சிப் பெயரிலேயே இருக்கும் அண்ணா பற்றி அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி இல்லை என ஜெயக்குமார் அறிவித்தார்.
இன்னும் இந்த விவகாரம் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், முத்துராமலிங்கத் தேவரிடம் பேரறிஞர் அண்ணா மன்னிப்புக் கேட்டதாகப் பேசிய அண்ணாமலைக்கு திராவிட கட்சிகள் சரியான பதிலடி தந்திருக்க வேண்டும் என திராவிட இயக்க மூத்த தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் சு.துரைசாமி, "பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மதுரையில் அண்ணா மன்னிப்புக் கேட்டதாக பேசியுளார். அதே பொய்யை திரும்பத் திரும்ப சொல்கிறார். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் பொய்யை திரும்பத் திரும்ப சொல்லும்போது, அப்போது உடனிருந்த பலரும் தெரியப்படுத்திய பின்னரும், சிறு வருத்தமோ, மன்னிப்போ தெரிவிக்க அண்ணாமலை தயராக இல்லை.
அண்ணாமலை கட்சிக்குள் யாரையும் மதிப்பது இல்லை. அண்ணா பற்றி தவறாகப் பேசிய விவகாரத்தில் அண்ணாமலை பேசியதற்கு திராவிடக் கட்சிகள் சரியான பதிலடி தந்திருக்க வேண்டும். திராவிட இயக்கங்கள் இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என்பது உள்ளபடியே வருத்தம் தருகிறது." எனக் கூறியுள்ளார்.

மேலும், "எந்த ஆட்சியும் நிரந்தரமானது அல்ல. இந்த பாஜக ஆட்சியும் மாறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அரசியல் தலைவராக உள்ள அண்ணாமலை நிதானத்துடன் செயல்பட வேண்டும். நடக்காத ஒன்றை கட்சி தலைவராக இருக்கும் அண்ணாமலை, பொய் சொல்கிறார். தவறை திருத்திக்கொள்வது தான் புத்திசாலித்தனம். அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதற்கு வருத்தம் தெரிவிக்காவிட்டால், அது அவரது அரசியல் எதிர்காலத்தில் பின்விளைவை ஏற்படுத்தும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நடைபயணம் நாடறிந்த ஒன்று. கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரை நடந்தே சென்றவர். அண்ணாமலை போல் நடைபயணம் சென்றவர் அல்ல. அப்போது வைகோவுக்கு கூடாத கூட்டமா, அண்ணாமலைக்கு கூடிவிட்டது? அதுவே நிலைக்கவில்லை. இந்தக் கூட்டம் எல்லாம் எம்மாத்திரம்?" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications