US Tariff: பல்லடத்தில் ஏற்றுமதி நிறுவனம் மூடல்! 2 யூனிட் மூடப்பட்டதால் 1000 தொழிலாளர்கள் வேலையிழப்பு
திருப்பூர்: அமெரிக்காவின் வரி விதிப்பு எதிரொலியால் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இரண்டு யூனிட்டுகள் மூடப்பட்டதால் சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து, அமெரிக்காவிற்கு வரும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த முடிவால் இந்தியாவின் சுமார் ரூ.5.4 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதியை நேரடியாக பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வரி விதிப்பால் அமெரிக்க சந்தையில் ஆடைகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், தளவாடங்கள், கடல் உணவுகள் போன்ற இந்தியப் பொருட்கள் அதிக விலையில் கிடைக்கப் போகின்றன. இதனால் அவற்றின் தேவையே சுமார் 70 சதவீதம் வரை குறையக்கூடும்.
பின்னலாடை உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருந்து வருகிறது. உலக அளவில் பின்னலாடை உற்பத்தி செய்வதிலும், தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. குறிப்பாக இந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் பகுதியில் இருந்து, 68 சதவீதம் பின்னலாடை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
திருப்பூர் பகுதியில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் சந்தைகளை வசப்படுத்தி ஆண்டுக்கு ரூ.46 ஆயிரம் கோடி என்ற அளவில் பின்னலாடை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றில் கிட்டத்தட்ட 30 சதவீதம் வர்த்தகம் அமெரிக்காவுடன் ஆன நிறுவனங்களுடன் நடைபெறுகிறது.
திருப்பூரில் அமெரிக்கா ஏற்றுமதியை நம்பி பல்வேறு நிறுவனங்கள் பின்னலாடை உற்பத்தி செய்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு கொள்கை திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனங்களுக்கு மட்டுமில்லாமல் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பு எதிரொலியால் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இரண்டு யூனிட்டுகள் மூடப்பட்டதால் சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். திருப்பூர் நிறுவனங்களின் சுமையைக் குறைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications