ஸ்டாலினுக்கு வானதி வைத்த சேலஞ்ச்.. "செத்து போன கட்சிக்காக இத்தனை முயற்சியா".. காங்கிரஸ் மீது அட்டாக்
ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் நீட் தேர்வு விவகாரத்தில் சவால் விடுத்துள்ளார்
திருப்பூர்: நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜகவின் வானதி சீனிவாசன் நேரடி சவால் விடுத்துள்ளார்.. அத்துடன் உபி காங்கிரஸ் கட்சியை சரமாரியாகவும் விமர்சித்துள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் அக்கட்சியின் மகளிரணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், வள்ளிக் கும்மி கலை நிகழ்ச்சியில் பெண்களுடன் கலந்து கொண்டார்... அவர்களுடன் இணைந்து பாரம்பரிய கும்மியாட்டம் ஆடினார்.
பிறகு திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்க தொடர் ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதுமக்கள்
இதில் 15 கல்லூரி மாணவர்கள் சேர்ந்து சுமார் 60 மணி நேரத்தில் வரைந்த ஓவியம் தனியார் மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.. வானதி சீனிவாசன் அதனையும் பார்வையிட்டார். பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் பிரதமர் மோடியின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் திட்டங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த ஓவியமானது வரையப்பட்டு உள்ளது.

விவசாயிகள் படுகொலை
திருப்பூர் கல்லூரி மாணவர்கள் 15 பேர் சேர்ந்து சுமார் 60 மணி நேரத்தில் இந்த ஓவியத்தை வரைந்துள்ளனர். இந்த ஓவியமானது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது... உபியில் நடந்த விவசாயிகள் படுகொலை குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்று அந்த மாநில முதல்வர் யோகி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விவசாயத்துறை அமைச்சர்
வேளாண் திருத்த சட்டத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது. அப்போதைய விவசாயத்துறை அமைச்சராக இருந்த சரத்பவார் தலைமையிலான குழுதான், தற்போதைய வேளாண் திருத்த சட்ட வரைவை பரிந்துரை செய்தது... உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வருவதால், செத்துப்போன தனது கட்சியை வளர்த்து எடுக்க காங்கிரஸ் முயற்சி எடுத்து வருகிறது.

வேளாண் சட்டம்
வேளாண் சட்டம் மூலம் விவசாயிகள் வாழ்க்கை உயர்ந்து விடும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சி அதனை தடுக்க முயல்கிறது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 12 மாநில முதல்வர்களுக்கு மட்டுமல்லாது இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினாலும் தமிழகத்தில் நீட் தேர்வை தடை செய்ய முடியாது.. நீட் தேர்வு சுப்ரீம்கோர்ட்டால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று...

ஏமாற்றம்
மாணவர்களை ஏமாற்றாமல் எதார்த்தத்தை புரிந்து கொண்டு திமுக ஆட்சி புரிய வேண்டும்... தன்னுடன் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளா மற்றும் காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநில முதல்வர்களுக்கு நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்வார்களா? என்பதை அவர் கேட்க வேண்டும்" என்றார். உபியில் விவசாயிகளை ஏற்றி கொன்றதற்கு நேற்றைய தினம் பாஜகவின் குஷ்புவே கண்டனம் தெரிவித்திருந்தார்..

வேதனை
மனித உயிர்கள்தான் அனைத்தையும்விட முக்கியமானது என்று சொல்லி இருந்தார்.. அதேபோல பல்வேறு கட்சியினரும் கண்டனங்களையும், வருத்தங்களையும் தெரிவித்து வரும் நிலையில், பாஜக தரப்பு இதுவரை அதுகுறித்து ஏதும் பேசாமல் உள்ளது.. அத்துடன், இந்த விஷயத்தில் விவசாயிகளின் விவகாரத்தைவிட காங்கிரஸை டேமேஜ் செய்யும் போக்கை கையில் எடுத்துள்ளது வேதனையை தருவதாக அதிருப்திகள் கிளம்பி வருகின்றன.












Click it and Unblock the Notifications