திருப்பூரில் நள்ளிரவில் சுவர் ஏறி குதித்த 27 வயது காமுகன்.. 75 வயது மூதாட்டிக்கு ஏற்பட்ட நடுக்கம்
திருப்பூர் பிச்சம்பாளையம் புதூர், இந்திரா நகரைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர், இரவு தனது வீட்டின் வெளிவளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென வீட்டின் மதில் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தார். பின்னர் வீட்டின் கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த அந்த மூதாட்டியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி சத்தம் போடவே, வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த அவரது மகன் கதவை உடைத்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். இதைப் பார்த்ததும் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

அங்கிருந்து அரை நிர்வாணமாக தப்பிய அந்த நபர், அருகில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் ஓட்டைப் பிரித்து உள்ளே நுழைய முயன்றார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி சத்தம் போடவே, அங்கிருந்தும் விரட்டப்பட்டார். தொடர்ந்து காமாட்சியம்மன் கோவில் வீதிக்குச் சென்ற அவர், அங்கு வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களின் 2 விலையுயர்ந்த மொபைல் போன்களையும் திருடிக்கொண்டு தப்பினார்.
அதன் பிறகும் அடங்காத அந்த நபர், கிருஷ்ணர் வீதிக்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த 75 வயது மூதாட்டி ஒருவரிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடி வரவே, அந்த நபர் அங்கிருந்தும் தப்பியோடி தலைமறைவானார்.
ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த இந்த தொடர் அத்துமீறல் சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, மூதாட்டிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, மொபைல் போன்களைத் திருடிச் சென்றது திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, அண்ணன்தல் கிராமம், பள்ளிக்கூடத்து வீதியைச் சேர்ந்த ரகுபதியின் மகன் வீரராகவன் (வயது 27) என்பது தெரியவந்தது. தற்போது திருப்பூர் ஸ்ரீ நகரில் குடியிருந்து பனியன் நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த வீரராகவனைப் போலீசார் இன்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications