தாசில்தார் முதல் விஏஓ.. யாரும் தப்ப முடியாது.. பட்டா மாறுதலுக்கு லஞ்சம்.. இதுதான் திருப்பூர் அதிரடி
திருப்பூர்: கையும் களவுமாக சிக்கி அசிங்கப்பட்ட விஏஓ-வுக்கு, திருப்பூர் நீதிமன்றம் சரியான தண்டனையை தந்திருக்கிறது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் போலியான பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரிகை போலவே உருவாக்கி மோசடிகள் பெருகி வருகின்றன.. இந்த மோசடிகளை அடியோடு ஒழிக்கும் முயற்சியில் தமிழக பதிவுத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

அதேபோல, போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்கவும், லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு நிறைய முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறது. ஆனாலும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைதாகியும் வருகிறார்கள்.
போலி பத்திரங்கள்: நேற்றுகூட நாகப்பட்டினத்தில் பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கி ஒரு பெண் அதிகாரி கைதாகி உள்ளார்.. கீழ்வேளூர் அருகே அகரக்கடம்பனூர் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர் நிலப்பட்டா மாறுதல் செய்வதற்காக அகரக்கடம்பனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
விஏஓ செல்வி, கணேசனை பலமுறை அலைக்கழித்ததுடன், பட்டா மாறுதலுக்கு 10000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் தந்தார். அவர்களது அறிவுரைப்படி ரசாயனம் கலந்த பணத்தை கணேசன் செல்வியிடம் தரும்போது, கையும் களவுமாக பிடிபட்டார். செல்வியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவரை அழைத்துச் சென்றதை, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.
நீதிமன்றம்: இப்படி உடனுக்குடன் கைதாவது ஒருபக்கம் நடந்துவந்தாலும், சற்று தாமதமானாலும் நீதிமன்றம் மூலம் லஞ்சம் வாங்கியவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். நேற்று திருப்பூர் கோர்ட்டில், ஒரு லஞ்ச வழக்கில் 14 வருடங்கள் கழித்து தண்டனை தீர்ப்பு தரப்பட்டுள்ளது..
திருப்பூர் பிஎன் ரோட்டை சேர்ந்தவர் ஹோமியோபதி டாக்டர் தண்டபாணி.. இவரது அண்ணன் மேகநாதன். இவர்களது அப்பா மாரப்பன், மகன்கள் இருவருக்கும் ராக்கியாபாளையத்தில் உள்ள, மூன்று ஏக்கர் நிலத்தில், தலா 93 சென்ட் பிரித்து தந்திருந்தார்..
துணை தாசில்தார்: இதையடுத்து, தனித்தனி பட்டா கேட்டு சகோதரர்கள் அவிநாசி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர்.. அப்போது மண்டல துணை தாசில்தாராக இருந்த பாலசுப்ரமணியம் (56), பட்டா வழங்குவதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டாராம்.. ஆனால் தண்டபாணிக்கு லஞ்சம் தர விருப்பமில்லை.. எனவே, விஏஓ பாலசுப்பிரமணியம் பேரம் பேசி, ரூ.8 ஆயிரம் தருமாறு கேட்டிருக்கிறார்..
ஆனால் லஞ்சம் தருவதே தண்டபாணிக்கு பிடிக்கவில்லை.. அதனால், கோவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார். அவர்களின் அறிவுறுத்தல்படி, கடந்த 2008 ஜூலை 10ம் தேதி அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் தண்டபாணி, பாலசுப்ரமணியத்திடம் ரூ.8 ஆயிரத்தை தந்தபோது போலீசார் விஏஓவை அதிரடியாக கைது செய்தனர்.
தண்டனை: இந்த வழக்கு திருப்பூர் தலைமை குற்றவியல் நீதித்துறை மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 14 வருடங்களாக நடந்து வந்தது.. நீதிபதி செல்லத்துரை நேற்று இதில் தீர்ப்பளித்தார்.. இறுதியில் விஏஓ பாலசுப்ரமணியத்துக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். 14 வருடம் கழித்தும் குற்றவாளி தண்டிக்கப்பட்டுள்ளது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications