Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவோடு இரவாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.. 15 நாள் காவல்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. நில மோசடி வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ரூ.100 கோடி மதிப்புள்ள நில அபரிப்பு வழக்கில் கடந்த 1 மாதமாக தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் சிபிசிஐடி போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். கரூர் அழைத்து வரப்பட்டு சிபிசிஐடி அலுவலகத்தில் 6 மணி நேர விசாரணைக்கு பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

AIADMK MR Vijayabaskar cbcid

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை தனது மனைவி, மகளை மிரட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர் என கரூர் டவுன் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 14ஆம் தேதி புகார் அளித்தார்.

இதேபோல் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதரும், போலியான சான்றிதழ்கள் கொடுத்து நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மற்றும் தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் கொடுத்தார். சார்பதிவாளர் அளித்த புகாரின்பேரில் யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், நில உரிமையாளர் பிரகாஷின் மகள் ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் பிரவீன் உட்பட 13 பேர் மீது கொலை மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நில மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான கரூர் சாலையில் உள்ள என்.எஸ்.ஆர்.நகர் அடுக்குமாடி குடியிருப்பு வீடு, ரெயின்போ நகரில் உள்ள சாயப்பட்டறை அலுவலகம், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது சகோதரர் சேகர் வீடு என வழக்கில் தொடர்புடைய 13 நபர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 5ம் தேதி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி, 2வது முறையாக கடந்த 7 ஆம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 2 டிஎஸ்பிக்கள், 9 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சென்னையில் உள்ள வீடு மற்றும் கரூரில் உள்ள விஜயபாஸ்கர் வசிக்கும் அபார்ட்மெண்ட், கோவை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க், திருவிக சாலையில் உள்ள விஜயபாஸ்கரின் அறக்கட்டளை அலுவலகம், என்எஸ்ஆர் நகரில் உள்ள ஆதரவாளர் ராஜேந்திரன் வீடு, அதே பகுதியில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் வீடு, சாயப்பட்டறை அலுவலகம் என மொத்தம் 7 இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து கடந்த 11 ஆம் தேதி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பசுபதி செந்தில் உட்பட 14 பேரை கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு வரவழைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே கடந்த 1 மாதமாக தலைமறைவாக இருந்தபடி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது வழக்கறிஞர்கள் மூலம் முன்ஜாமீன் கோரி கரூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

ஆனால் எம்.ஆர் விஜயபாஸ்கரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் சிபிசிஐடி போலீசார், தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கேரளாவுக்கு தப்பியோடி தலைமறைவானார். இதனையடுத்து விஜயபாஸ்கரை பிடிக்க டிஎஸ்பிக்கள் தலைமையிலான 10 தனிப்படையினர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தேடி வந்தனர்.

அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் நெருங்கிய நண்பர்கள் உதவியுடன் கேரள மாநிலம் திருச்சசூரில் பதுங்கி இருப்பதாகவும், அவர் வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்களிடம் வாட்ஸ்அப் கால் மூலம் பேசி வருவதாகவும் சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் கேரளா சென்று கடந்த 2 நாட்களாக முகாமிட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் விஜயபாஸ்கர், அவரது உறவினர் பிரவீன் ஆகியோரை சிபிசிஐடி தனிப்படையினர் திருச்சூரில் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் அவரை காரில் கரூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று மதியம் 2 மணிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பின்னர் கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது.

ரூ.100 கோடி நிலமோசடி வழக்கு! கேரளாவில் பதுங்கியிருந்த அதிமுக மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது


பின்னர் கரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை நேற்று இரவு ஆஜர்படுத்தினர். நீதிபதி பரத்குமார், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.ஆர்.விஜயபாஸ்கரை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும், அவருடன் கைது செய்யப்பட்ட பிரவீன் கரூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் கடந்த ஒரு மாத காலமாக தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+