பல கோடி மதிப்புள்ள திருச்சி குத்தகை நிலம்.. ஓனருக்கே தெரியாமல்.. மனைவியுடன் சிக்கிய பாஜக நிர்வாகி
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் குத்தகைக்கு எடுத்த நிலத்தை விற்க போலி ஆவணம் தயாரித்து ரூ.4.50 கோடி முன்பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் பாஜக நிர்வாகி மற்றும் அவருடைய மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 17 ஏக்கர் தோப்பை ரங்கசாமி என்பவரிடம் பா.ஜனதா கட்சி விவசாய அணி மாநில துணைத்தலைவராக பொறுப்பு வகித்துவரும் கோவிந்தன் என்பவர் குத்தகைக்கு எடுத்து எப்படி போலி ஆவணம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்தார் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் பகுதியை சேர்ந்த 50 வயதாகும் தேவராஜன் என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சுப்பிரமணியபுரம் பகுதியில் குடியிருந்து வருகிறார். இவர் திருச்சி மாநகர போலீஸ் ஆணையரிடம் நில மோசடி தொடர்பாக புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறுகையில், "திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் அனாதை ஆசிரமம் கட்ட முடிவு செய்திருந்தேன். அதற்காக நான் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இடம் தேடிக் கொண்டிருந்தேன். அப்போது, நான் குடியிருக்கும் வீட்டை ஒட்டி உள்ள 17 ஏக்கர் தோப்புக்கு அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் (56) என்பவர் அடிக்கடி வந்து சென்று கொண்டிருந்தேன். நான் அனாதை ஆசிரமம் கட்ட இடம் தேடுவது பற்றி அறிந்த அவர், உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள இடம் எனது அக்காளின் கணவர் ரங்கசாமிக்கு சொந்தமானதுதான்... வேண்டுமென்றால் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
நான் இடத்தை நேரில் சென்று பார்த்ததுடன், புரோக்கர்கள் வாசு, சேகர் ஆகியோரிடம் அணுகி விசாரித்தேன். அவர்களும், அந்த தோப்பு கோவிந்தன் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்றார்கள். இதைத்தொடர்ந்து கோவிந்தன், முன்பணம் கொடுங்கள். நான் ஒப்பந்தம் போட்டு தருகிறேன் என்று கூறினார். அதன்படி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இடத்தின் உரிமையாளர் ரங்கசாமி பெயரில் ஒரு ஒப்பந்தத்தை என்னிடம் கொடுத்தார்கள்.
அதை நம்பி நான் மொத்தம் ரூ.4 கோடியே 68 லட்சத்தை பல்வேறு தவணைகளாக கோவிந்தன் மற்றும் அவருடைய மனைவி கீதா (52), புரோக்கர்கள் வாசு, சேகர் ஆகியோருக்கு அனுப்பி வைத்தேன்... கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரங்கசாமியை நான் நேரில் சந்தித்து பேசினேன். அப்போது அவர் 'கோவிந்தன் எனது உறவினரே கிடையாது. நான் இடத்தை விற்க எந்த ஒப்பந்தமும் போடவில்லை' என்று கூறினார்
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நான், இதுபற்றி கோவிந்தனிடம் கேட்டபோது, அவர் பணத்தை திருப்பித் தந்து விடுவதாக தெரிவித்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் அவர் பணத்தை திருப்பித்தரவில்லை. இதற்கு இடையே சம்பந்தப்பட்ட இடத்தை தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு ரங்கசாமி பத்திரப்பதிவு செய்து கொடுத்தது எனக்கு தெரியவந்தது. இதனால் மீண்டும் கோவிந்தனிடம் சென்று நான் கொடுத்த பணத்தை கேட்டேன். அப்போது அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே எனது பணத்தை மீட்டுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அந்த மனுவில் தேவராஜன் கூறியிருந்தார்.
அனாதை ஆசிரமம் கட்டுவதற்காக இடம் தேடியவரிடம் மோசடி நடந்தது குறித்து உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி மாநகர குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று காலை கோவிந்தன், அவரது மனைவி கீதா, புரோக்கர்கள் வாசு, சேகர் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட 17 ஏக்கர் தோப்பை ரங்கசாமி என்பவரிடம் பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவராக பொறுப்பு வகித்துவரும் கோவிந்தன் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். நில உரிமையாளரின் கையெழுத்தை கோவிந்தனே போட்டு நில உரிமையாளர் பெயரில் போலியாக ஆவணங்கள் தயார் செய்து அந்த தோப்பை தேவராஜனுக்கு விற்க முயன்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கோவிந்தனையும், கீதாவையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புரோக்கர்களை இரண்டு பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications