எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு!
திருச்சி: திருச்சி துறையூரில் அதிமுக கூட்டத்தின்போது ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக துறையூர் நகரச் செயலாளர், நகரமன்ற உறுப்பினர், வடக்கு ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 14 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்ட போது, கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் ஒன்று புகுந்தது. அப்போது, ஆத்திரம் அடைந்த எடப்பாடி பழனிசாமி, தனது பரப்புரையை இடையூறு செய்ய, திமுக அரசு, ஆம்புலன்ஸ்களை ஏவி விடுவதாக குற்றம்சாட்டினார்.

இனி நான் பிரச்சாரம் செய்யும்போது ஆம்புலன்ஸ் வந்தால் ஆம்புலன்ஸை ஓட்டி வருபவர் அதே ஆம்புலன்ஸில் நோயாளியாக போவார் என மிரட்டல் விடுத்த நிலையில் அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை சூழ்ந்து கொண்டு தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி துறையூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமியின் பரப்புரைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, சாலையில் அதிமுக தொண்டர்கள் கூடியிருந்த நிலையில், அந்த வழியாக கூட்டத்திற்கு நடுவே ஆம்புலன்ஸ் ஒன்று நுழைந்தது. அதனை தடுத்து நிறுத்திய அதிமுகவினர், ஆம்புலன்ஸின் பின்பக்க கதவை திறந்து பார்த்து உள்ளே நோயாளி இல்லாததால் ஆம்புலன்ஸை சேதப்படுத்திய அதிமுகவினர், ஓட்டுநரையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காயமடைந்த ஓட்டுநர் செந்தில்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிமுக கூட்டத்திற்குள் ஒருவர் மயங்கி விழுந்ததாக அழைப்பு வந்ததால் அங்கே சென்றதாக அவர் தெரிவித்தார். தன்னை மட்டுமல்லாது, 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் ஆம்புலன்ஸ் உதவியாளரையும் அதிமுகவினர் தாக்கியதாக ஓட்டுநர் செந்தில்குமார் கூறினார்.
108 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை தாக்கினால் வன்முறை தடுப்பு மற்றும் உடைமைகள் சேதார தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மருத்துவ பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தாக்கும் நபர்கள் மீது மூன்று முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஆம்புலன்ஸை மறித்து தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து துறையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துறையூர் அதிமுக நகரச் செயலாளர், நகரமன்ற உறுப்பினர், வடக்கு ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 14 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications