ஒரு கோடியே ஒன்று.. அசத்திய முதல்வர் ஸ்டாலின்.. வழங்கப்பட்ட மருந்து பெட்டகம்
திருச்சி: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகத்தை வழங்கியுள்ளார். தொற்றா நோய்களான சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடு தேடிச் சென்று, அவர்களுக்கு மாதம்தோறும் மருந்து, மாத்திரைகள் வழங்குவதே மக்களை தேடி மருத்துவம் திட்டமாகும்.
தமிழகத்தில் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் முதல் நபருக்கு மருத்துவ பெட்டகம் வழங்கி அத்திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்தி ஒரு கோடி பயனாளிகளை கண்டறிந்து திட்டத்தை செயலாக்கம் செய்ய வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இந்தத் திட்டத்தின்மூலம், தொற்றா நோய்களான சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடு தேடிச் சென்று, அவர்களுக்கு மாதம்தோறும் மருந்து, மாத்திரைகள் தரவிருப்பதாகத் தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது இந்த திட்டம் கடந்த ஓராண்டில் படிப்படியாக வளர்ந்து ஒரு கோடியாவது பயனாளி என்ற இலக்கை தொட்டு இருக்கிறது.
அந்த ஒரு கோடியே 1வது பயனாளி திருச்சி அருகே உள்ள சன்னாசிப்பட்டியில் கண்டறியப்பட்டு உள்ளார். இந்த நிலையில் இன்று திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியான மீனாட்சிக்கு இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் மருந்து பெட்டகத்தை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் 20,000 சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை ரூ.1000 உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications