அன்று கல்லூரி பேருந்தை எரித்தார்கள்.. இன்று ஆம்புலன்ஸை மறிக்கிறார்கள்! அதிமுகவை விட்டு விளாசிய திமுக
திருச்சி: துறையூரில் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொள்ள இருந்த நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கிய அதிமுக தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. திமுகவினர் இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக மண்ணச்சநல்லூரில் பரப்புரையை முடித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி துறையூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். இந்தநிலையில் எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு முன்பாக துறையூர் அருகே ஆத்தூர் சாலையில் நடைபெற்ற விபத்தில் சிக்கிய நபரை மீட்பதற்காக துறையூரை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் அதிமுக தொண்டர்கள் நின்று கொண்டிருந்த வழியாக சென்றுள்ளது.

எடப்பாடி பழனிசாமி ஆம்புலன்ஸ்
அப்போது திடீரென ஆம்புலன்ஸை வழிமறித்த அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆம்புலன்ஸ் கதவை திறந்து டிரைவரை தாக்க முற்பட்டனர். அதேவேளை ஆம்புலன்சை சூழ்ந்து கொண்ட தொண்டர்கள் ஆம்புலன்ஸ் பின்பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்து அடாவடியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிமுக தொண்டர்களை விலக்கி ஆம்புலன்ஸ் செல்வதற்காக வழி ஏற்படுத்தி கொடுத்தனர். அண்மையில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி பரப்பரை கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் சென்றபோது எடப்பாடி பழனிச்சாமி கோபமடைந்த சூழலில் தற்போது அவர்களது தொண்டர்களும் ஆம்புலன்ஸ் வாகனத்தை சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்புலன்ஸ் டிரைவர் பற்றி எடப்பாடி பழனிசாமி சர்ச்சை
வேலூர் மாவட்டம்,அணைக்கட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் மக்களை சந்தித்துப் பேசினார். இதையடுத்து அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே குழுமியிருந்த மக்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தார் அப்போது அவர், ''இந்த அணைக்கட்டு தொகுதி அதிமுகவின் கோட்டை. நான் தொடர்ந்து பல கூட்டங்களில் கவனித்து வருகிறேன். கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆள் இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை இந்த அரசாங்கம் செய்துவருகிறது.
எத்தனை ஆம்புலன்ஸ் விட்டாலும் எதுவும் செய்யமுடியாது.தில்லு திராணி இருந்தால் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும். மக்கள் கூட்டத்துக்கு இடையில் இப்படி வந்தால் மக்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் என்ன செய்வது. ஆம்புலன்ஸ்ல நோயாளி யாருமே இல்லாமல், வெறுமனே போகிறது. இதை 30 கூட்டத்தில் பார்த்துவிட்டேன். எதிர்க்கட்சியின் கூட்டம் நடக்கிறது என்றால் காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இது குறித்து நாளை காவல் துறையிடம் புகார் கொடுப்போம். மக்களுக்கு தீமை செய்யும் ஆட்சியாகத்தான் இருக்குது திமுக ஆட்சி. அதிமுக ஆட்சியின் திட்டங்களை எல்லாம் நிறுத்தியதுதான் திமுக சாதனை, என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார்.
அதிமுக செயல் - திமுக விமர்சனம்
அதிமுகவினரின் இந்த செயலுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. அதில், தற்குறி தலைவனின் தவறான வழிகாட்டுதலின் பேரில் சொன்ன வார்த்தைகளால் சாலையில் மக்களைக் காக்க விரைந்து செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது! அப்போது கல்லூரி பேருந்துகளை எரித்தார்கள்.. இப்போது ஆம்புலன்ஸை மரிக்கிறார்கள். அதிமுகவினர் மாறவே இல்லை என்று திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications