அமைச்சர் பதவி ஆசையில் தான் அண்ணாமலை சாட்டை எடுத்தார்.. வேற கணக்கு.. திமுக அட்டாக்!
திருச்சி: மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்துத்தான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையில் அடித்துக் கொண்டிருக்கிறார் என்று திமுக செய்தி தொடர்புத் துறை தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். அண்ணாமலை தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக் கொண்டதை திமுக விமர்சித்துள்ளது.
திருச்சியில் நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் திமுக செய்தி தொடர்புத்துறை தலைவரும், முன்னாள் எம்.பியுமான டிகேஎஸ் இளங்கோவன். அப்போது பேசிய அவர், "அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் வேண்டுமென்றே திமுக மீது களங்கம் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறார்கள்.

குற்றவாளியை உடனடியாக கைது செய்துவிட்டார்கள். கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவி குறித்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்பது தெளிவாகி உள்ளது. இந்த வழக்கில் பின்பு வேறு என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் என்பது புரியவில்லை. அண்ணாமலை திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக சாட்டையடி போராட்டம் நடத்தவில்லை. மாறாக எல்.முருகன் கையில் வேலுடன் நடந்த பின்பு அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கிடைத்தது போல தனக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொண்டுள்ளார்.
கர்நாடகாவில் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட போது அங்கு காவல் அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை. கெளரி லங்கேஷ் கொலை குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கெளரி லங்கேஷை கொலை செய்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அண்ணாமலை விளக்கம் அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், மாணவர் ஒருவருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த போது ஒருவர், அந்த மாணவரைத் தாக்கிவிட்டு, மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் எஃப்.ஐ.ஆர் காப்பி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக அரசு மற்றும் காவல்துறையை கடுமையாக விமர்சித்ததோடு, "நான் என்னை 6 முறை சாட்டை அடித்துக்கொள்வேன். இனி திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை என் காலில் செருப்பு அணிய மாட்டேன்." என அறிவித்தார்.
அதன்படி, அண்ணாமலை கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பாக தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். பச்சை வேட்டி கட்டி, வெற்றுடம்போடு, தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக் கொண்டார் அண்ணாமலை. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான், திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன், அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம், அமைச்சர் பதவிக்காகத்தான் என விமர்சித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications