பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்.. தமிழ்நாடு என்ற மாநிலமே இருக்காது! மேடையிலேயே வருத்தப்பட்ட ஸ்டாலின்
திருச்சி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்ற மாநிலமே இருக்காது என திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் மேடையிலேயே முதல்வர் ஸ்டாலின் வருத்தமாக கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் திமுக தேர்தல் பணியை தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் இன்று திருச்சியில் 15 மாவட்டங்களை சேர்ந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 12,600 வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக பாஜகவை விமர்சனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நம்முடைய தொண்டர் பலத்துக்கும், கட்டமைப்புக்கு நிகராக தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல இந்தியாவில் ஒரு கட்சி இருக்கா? அந்த பலத்தை நாம் சமூக ஊடகங்களில் முழுமையாக காட்ட வேண்டும். யார் ஆட்சிக்கு வரணும் என்பதை விட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான் முக்கியம். புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நம் அணி வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமல்ல. இந்தியா முழுமைக்கும் நம் அணி வெற்றி பெற வேண்டும்.
ஏனென்றால் இந்தியாவின் கட்டமைப்பை பாஜக சிதைத்துவிட்டது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது. பாஜக ஆட்சி தொடரும் என்றால் இந்தியாவில் மக்களாட்சி, சமூகநீதியை யாராலும் காப்பாற்ற முடியாது.
மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் இந்தியாவில் ஜனநாயகமே இருக்காது. ஏன் தமிழ்நாடு என்ற மாநிலமோ, சட்டமன்றமோ, முதல்வரோ, அமைச்சரோ, எம்எல்ஏக்களோ இருக்கமாட்டார்கள். அத்தனையும் காலி செய்து விடுவார்கள். இதுதான் அனைத்து மாநிலங்களுக்கும் நடக்கும்.
டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டி இருக்கிறார்கள். அதில் மொத்தம் 888 இருக்கைகள் உள்ளன. எதற்காக என்றால் நாடாளுமன்றத்தில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப இருக்கை அமைக்க நினைக்கின்றனர். மக்கள்தொகை அடிப்படையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பார்க்கிறார்கள்.குடும்ப கட்டுப்பாட்டு முறையை சரியாக பின்பற்றிய தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும்.
நாம் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் வடமாநில எம்பிக்களை வைத்து ஆட்சியை பிடித்து கொள்ளலாம் என தப்புக்கணக்கு போடுகிறார்கள். தமிழ்நாட்டின் குரலை இதன்மூலம் தடுக்க பார்க்கிறார்கள். இதனால் இந்த தேர்தலை மிகவும் முக்கியமானது என நான் கூறுகிறேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications