தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசியா? “பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க..” ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்!
பிளாஸ்டிக் அரிசி என வதந்தி பரப்பப்பட்டு வருவதாக ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சி : செறிவூட்டப்பட்ட அரிசியை பிளாஸ்டிக் அரிசி என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், செறிவூட்டப்பட்ட அரிசி பற்றி சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாகவே பிளாஸ்டிக் அரிசி என்ற வதந்தி பொதுமக்களிடம் பரப்பப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி குறித்த வதந்தி தீவிரமாகப் பரவியபோது தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில்
திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் முதல் முறையாக 2877 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் பிப்ரவரி 17 ஒரே நாளில் மட்டும் 51,307 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து தமிழ்நாடு அரசு சாதனை படைத்துள்ளது எனத் தெரிவித்தார்.

வாடகை கட்டிடங்களில்
மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த 2021 - 22 ஆண்டில் 14.84 லட்சம் விவசாயிகளுக்கு 10,292 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 15.59 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரத்து 10 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். வாடகை கட்டிடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளை அரசின் சொந்த கட்டிடங்களுக்கு மாற்ற படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாழடைந்த, இடியும் நிலையில் உள்ள கட்டிடங்களும் நல்ல நிலையில் உள்ள கட்டிடங்களுக்கு மாற்றப்படும் என்றும் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பிளாஸ்டிக் அரிசி - வதந்தி
தொடர்ந்து பேசிய அவர், "செறிவூட்டப்பட்ட அரிசியை பிளாஸ்டிக் அரிசி என சமூக ஊடகங்களில் பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம். ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் அரிசி கடத்தலை கட்டுப்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. அதுவும் விரைவில் களையப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.

பரவும் வதந்திகள்
சமீபத்தில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி பொதுமக்களிடையே தகவல் பரவியதால், பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து அங்கு அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், தரமான அரிசியே விநியோகிக்கப்படுகிறது என்றும், பொதுமக்களிடம் தவறுதலாக வதந்தி பரப்பப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications