ஏன் திருப்பதிக்கு ரூ.44 லட்சம் நன்கொடை கொடுக்க கூடாது? கேள்வியால் டென்ஷனான அமைச்சர் கே.என்.நேரு!
திருச்சி: திருப்பதி கோவிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை வழங்கியது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு கோபம் அடைந்து பதில் அளித்துள்ளார். ஏன் திருப்பதி ரூ.44 லட்சம் நன்கொடை வழங்கக் கூடாது என்று எதிர் கேள்வி எழுப்பிய அவர், எல்லோரும் என்னை நல்லவன் என்று சொல்வார்களா? என்று கேட்டு வேகமாக புறப்பட்டு சென்றார்.
திருச்சி மாவட்ட திமுக அடையாளமாக இருப்பவர் கேஎன் நேரு. ஸ்டாலினின் முக்கியமான தளபதிகளில் ஒருவரான கேஎன் நேருவின் கள செயல்பாடுகளில் பலரையும் பிரமிக்க வைக்கும். அமைச்சரவையில் முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளதோடு, பல்வேறு மாவட்டங்களில் நடந்து வரும் திமுக உட்கட்சி பூசலையும் கேஎன் நேரு மூலமாகவே ஸ்டாலின் டீல் செய்து வருகிறார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.44 லட்சம் காணிக்கை வழங்கியதாக புகைப்படம் வெளியாகியது. இது சர்ச்சையாகியது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே 174 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், SIR கணக்கெடுப்பிற்கு வாக்குச்சாவடி பிரமுகர்கள் செல்லலாம் என்று தேர்தல் ஆணையமே அனுமதி கொடுத்துள்ளது. அதில் என்ன தவறு இருக்கிறது. மற்ற கட்சிகளின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் வருவதை யாரும் தடுப்பதில்லை. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதியிலும் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
SIR படிவத்தை நிரப்பி தர திமுகவினர் உதவுவதில் எந்த தவறும் இல்லை. நாளை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் ஆட்சியில் இருப்பவர்கள் ஏன் இதை கவனிக்கவில்லை என்று எங்கள் மீதே குற்றம்சாட்டுவார்கள். அதேபோல் விஜய்க்கு வேண்டுமானால் திமுக ஆட்சி நல்லவர்கள் போல் வேஷம் போடுவது போல் தெரியலாம். ஆனால் மக்களுக்கு திமுக ஆட்சியைப் பற்றியும், முதல்வரைப் பற்றியும் நன்றாகவே தெரியும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து திருப்பதி கோவில் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு டென்ஷனாகினார். செய்தியாளர்கள் கடந்த 9ஆம் தேதியன்று உங்கள் பிறந்தநாளையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்னதானத்திற்கு ரூ.44 லட்சம் வழங்கியதாக புகைப்படம் வெளியாகியது என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு கே.என்.நேரு, நான் பணம் கட்டுகிறேன்.. கட்டக் கூடாதா? நான் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு ரூ.44 லட்சம் காணிக்கை வழங்கியது குறித்து விமர்சனம் செய்யட்டும்.. எல்லோரும் என்னை நல்லவன் என்று சொல்வார்களா? என்று எதிர் கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications