மலைக்கோட்டை நகரில் மும்முனை போட்டி.. திமிரி எழப்போகும் திருச்சி வேட்பாளர் யார்? கள நிலவரம் இதுதான்?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில் தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மலைக்கோட்டை மாநகராம் திருச்சியில் வெற்றிக்கொடி நாட்டப் போகும் வேட்பாளர் யார் என்று எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் எழுந்திருக்கிறது.

மதிமுகவின் துரை வைகோ முதன்முறையாக களம் கண்டிருப்பதும், பாஜக அதிமுக தனித்து போட்டியிடுவதும், வாக்கு வங்கிகள் தனித் தனியாக பிரிந்திருப்பதும் அந்த தொகுதி மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

Lok Sabha Election 2024 Which Party Will Win Trichy Constituency

தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் இருக்கும் மக்களும் எளிதில் அணுகக் கூடிய ஒரு நகரம் என்றால் அது திருச்சி. தான் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அதனை தலைநகராக்க முயற்சித்ததாகவும் தகவல்கள் இருக்கின்றன.

திருச்சி தொகுதி: அந்த அளவுக்கு தொழில், ஆன்மீகம், சுற்றுலா என பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் நகரம் தான் திருச்சி. காவிரி பாயும் கரையோரம் விவசாயமும் நன்கு செழித்து இருக்கிறது. இதனால் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பு பெற்ற நகரமாகவே திருச்சி இருந்திருக்கிறது. இவ்வளவு சிறப்பு பெற்ற திருச்சி நகரத்தில் இதுவரைக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்திருக்கின்றனர். கடந்த முறை வெற்றி பெற்ற திருநாவுக்கரசர் தொடங்கி தற்போது அதில் இருக்கும் முக்கிய வேட்பாளர்கள் வரை அனைவருமே வெளியூர்களை சேர்ந்தவர்கள் தான்.

துரை வைகோ: தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் மதிமுகவில் முதன்மை செயலாளர் துரை வைகோ, அதிமுக கூட்டணி சார்பில் கருப்பையா, பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி ராஜேஷ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றனர். கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் பெரும் வெற்றி பெற்றார். அதன் காரணமாக கூட்டணி பலத்தில் வென்று விடலாம் என நினைத்த மதிமுக தற்போது துரை வைகோவை களம் இறக்கி இருக்கிறது. தாங்கள் வெற்றி பெற்ற தொகுதி தங்களுக்கு கிடைக்கவில்லை என காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது வெற்றியை பாதிக்காது என்கின்றனர் திமுகவினர்.

வெற்றி வாய்ப்பு: தற்போதைய சூழலில் ஆரம்பத்தில் இருந்து திருச்சியை சேர்ந்த இரு அமைச்சர்களான கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் சிறப்பாக களப்பணி ஆற்றி வருகின்றனர். இதன் காரணமாக வெற்றிக்கனி எட்டி விடக் கூடிய தூரம் தான் எனச் சொல்கின்றனர். அதே நேரத்தில் துரை வைகோவின் உணர்ச்சி மிகுந்த பேச்சுக்கள் கூட்டணிக்குள் சற்றே மன வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறினாலும் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் களப்பணியாற்றி வெற்றியை ஈட்ட வேண்டும் என அமைச்சர்கள் தொண்டர்களுக்கு உத்தரவிட்டு அதனை நோக்கி பயணிப்பதாக சொல்கின்றனர். மேலும் துரை வைகோ தொகுதியை சேர்ந்தவரே இல்லை என மற்ற கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் வலுவான கருத்தை முன்வைத்து வருகின்றனர். ஆனால் அது வெற்றியை பாதிக்கும் என சொல்வதற்கில்லை. காரணம் தற்போது போட்டியிடுபவர்கள் அனைவருமே தொகுதியை பொருத்தவரை திருச்சி தான் என்றாலும் மாவட்டத்தை பொருத்தவரை வேறு வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தான்.

அதிமுக கூட்டணி: அதிமுகவை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் ஆதரவோடு கந்தர்வகோட்டையை சேர்ந்த கருப்பையா போட்டிருக்கிறார் பல்வேறு விஷயங்களை முன் வைத்து இவரது பிரச்சார யுக்தி இருக்கிறது திருச்சியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும், முந்திரி ஏற்றுமதி அதிகரிக்க நடவடிக்கை காவேரி குண்டாறு திட்டம் உள்ளிட்டவைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.முன்னாள் எம்பி குமாரின் ஆதரவும் இருக்கிறது. ஆனால் திருச்சியில் பெரிய அளவில் அதிமுகவுக்கு செல்வாக்கு இருந்தாலும் அது முக்குலத்தோரின் ஆதரவாகவே இருக்கிறது.

முக்குலத்தோர் வாக்குகள்: தற்போது பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதால் சுமார் 25% முக்குலத்தோர் வாக்குகள் அதிமுகவுக்கு செல்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் பாஜகவுக்கு அந்த வாக்குகள் செல்லலாம் எனவும் கூறப்படுகிறது. இது ஒரு வகையில் அதிமுகவுக்கு பின்னடைவு தான் காரணம் கடந்த தேர்தல்களில் அதிமுக ஓரளவு செல்வாக்கு பெற முக்குலத்தோர் வாக்குகளே பக்க பலமாக இருந்திருக்கிறது.

பாஜக-அமமுக: அமமுகவை பொறுத்தவரை பாஜக கூட்டணி அக்கட்சிக்கு ஓரளவு கை கொடுக்கும் எனவே கூறப்படுகிறது காரணம் ஏற்கனவே கூறியது போல திருச்சி தொகுதியில் இருக்கும் முக்குலத்தோர் வாக்குகள் செந்தில் நாதனுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஸ்ரீரங்கம் பகுதிகளில் வசிக்கும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களின் வாக்குகளும் பாஜகவுக்கு கிடைக்கும் பட்சத்தில் துரை வைகோவுக்கு கடுமையான போட்டி அளிக்க முடியும் என அமமுக நம்புகிறது. அது மட்டுமல்லாமல் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்ற நிலையில் இந்த முறை கூட்டணி காரணமாக தங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என நம்புகிறது அமமுக.

வெற்றி யாருக்கு?: நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை இளைஞர்களிடையே சமூக வலைதளங்களில் பிரபலமான ஜல்லிக்கட்டு ராஜேஷ் களமிறங்குகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களை திரட்டி பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தியவர். அதுமட்டுமல்லாமல் தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்வது என கிராமப்புற இளைஞர்களிடையே இவருக்கு வரவேற்பு இருக்கிறது. மேலும் படித்த இளைஞர்களின் ஆதரவு நாம் தமிழர் கட்சிக்கு இருப்பதால் ஓரளவு நெருக்கடி கொடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி வாக்குகளை பெறும் என்கின்றனர் திருச்சி வாசிகள். ஆனால் கள நிலவரம் திமுக கூட்டணி- அதிமுக கூட்டணி- பாஜக கூட்டணியையே சுற்றியிருக்கிறது. மலைக்கோட்டை நகரத்தை பொருத்தவரை மும்முனை போட்டி தான் நிலவுகிறது எனவும் நடுநிலை வாக்காளர்கள் தான் வெற்றியை தீர்மானிப்பாளர்கள் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+