"உட்கட்சி பூசல்!" அன்பில் மகேஷுக்கு எதிராக பரபர பேனர்! திமுக தலைமைக்கு போன செய்தி.. என்ன மேட்டர்
திருச்சி: திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்த பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கு என்ன காரணம், திருச்சியில் இப்போது என்ன நடக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.
திமுக வலிமையாக இருக்கும் மாவட்டங்களில் ஒன்று திருச்சி. திமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே வலிமையாக இருக்கும் மாவட்டங்களில் ஒன்றாகத் திருச்சி இருக்கிறது. திமுகவுக்கு திருச்சியில் இருந்து பல தலைவர்களும் கிடைத்துள்ளனர்.

கடந்த சட்டசபைத் தேர்தலிலும் கூட அங்குள்ள அத்தனை சட்டசபை தொகுதிகளிலும் திமுகவே வென்றது. அந்தளவுக்குத் திருச்சியில் வலிமையாக திமுக இருந்து வருகிறது. இப்போது அங்கு தான் சிறு பூசல் கிளம்பியுள்ளது.
திருச்சி திமுக: திருச்சியில் பல காலமாகவே திமுக மூத்த தலைவர் கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோருக்கு இடையே மறைமுகமாக மோதல் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. அன்பில் மகேஷுக்கும் திமுக தலைமைக்கும் இருக்கும் தொடர்பு அனைவருக்கும் தெரியும். அதேநேரம் கே.என். நேரு திமுகவின் மூத்த மற்றும் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். இதன் காரணமாகவே திருச்சியில் எந்தவொரு முக்கிய முடிவாக இருந்தாலும் இரு தரப்பிற்கும் அதிருப்தி ஏற்படாத வகையில் எடுக்கப்படுகிறது.
இந்தச் சூழலில் திருச்சியில் அமைச்சர் கே என் நேருவின் ஆதரவாளர்கள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எதிராக போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் அன்பில் மகேஷ், அங்கே கட்சி பொறுப்பில் இருக்கும் கே.என். நேருவின் ஆதரவாளர்களை நீக்கி, அதற்குப் பதிலாகத் தனது ஆதரவாளர்களுக்குப் பொறுப்பு வழங்கி வருவதாக சில காலமாகவே புகார் இருந்து வருகிறது. அது தொடர்பாகவே இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது.
பதவி சர்ச்சை: அமைச்சர் அன்பில் மகேஷ், அங்கே பொறுப்பில் இருந்த கே என் நேரு ஆதரவாளர் குடமுருட்டி சேகரை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாகத் தனது ஆதரவாளருக்குப் பதவி வழங்கியதாகக் கூறப்படுகிறது. அன்பில் மகேஷ் அவ்வப்போது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் திருச்சி திமுகவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த கே என் நேரு ஆதரவாளர்கள், குடமுருட்டி சேகர் திருச்சி - கரூர் பைபாஸ் சாலையில் இது தொடர்பான போஸ்டர் ஒன்றை வைத்துள்ளனர்.
திமுக தலைவர் அண்ணாவின் படத்துடன் இருக்கும் அதில், "உழைப்பவனை தேடி கண்டுபிடித்து இயக்கம் நடத்தினால் தான் பலன் உண்டு, கிடைத்தவனை கொண்டு நடத்தினால் பலனில்லை" என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த கே. என். நேரு ஆதரவாளர்கள் இந்த போஸ்டரை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது திருச்சியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
திமுக தலைமைக்கு போன செய்தி: இந்த விவகாரம் இப்போது திமுக தலைமைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கட்சியில் ஒருவர் ஒரு பதவியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், அன்பில் மகேஷ் இளைஞரணி மாநிலச் செயலாளர், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் என இரு பதவிகளில் இருப்பதால் இதிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே. என். நேரு ஆதரவாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.
இது தொடர்பாக அவர்கள் திமுக தலைமைக்கு மனுக்களையும் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அதற்குள் இரு தரப்பிற்கும் இடையே இருக்கும் பூசலை சரி செய்ய வேண்டும் என்பதே திமுகவினர் கோரிக்கையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications