குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1,000 வழங்கப்படும்... அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!
திருச்சி: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1,000 வழங்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிப்பார் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
திருச்சியில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

மாநகராட்சி
திருச்சி மாநகராட்சி சார்பில் ரூபாய் 3 கோடியே 93 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக வாங்கப்பட்டுள்ள 2 நவீன சாலை சுத்தம் செய்யும் வாகனங்கள் மற்றும் திடக்கழிவுகளை தரம் பிரித்து வாங்கும் பணிக்கு வாங்கப்பட்டுள்ள 100 மின்கல வாகனங்களை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து துவக்கி வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், திருச்சியில் வீடுகள் தோறும் குப்பைகளை வாங்க மாநகராட்சி சார்பில் புதிதாக 100 வாகனங்கள் வாங்கப்படும் எனக் கூறினார்.

தூய்மை மாநகர்
குப்பைகள் இல்லாத மாநகரகமாக திருச்சியை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், விரைவில் மாசற்ற திருச்சியை உருவாக்கி காட்டுவோம் எனவும் உறுதியளித்தார். மேலும், 2011-ம் ஆண்டும் கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 48.3 சதவீதம் பேர் நகர்ப்புறத்தில் வசிக்கின்றனர் என்றும் இன்னும் 10 வருடத்தில் நகர்ப்புறத்தில் வாழ்வோர் சதவீதம் 60 ஆக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாதம் ரூ.1,000
ஜல்ஜீவன் திட்டத்தின் மானியத்தை 50 சதவீதத்தில் இருந்து 75 % ஆக உயர்த்த மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக கூறிய அவர், தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனக் கூறினார். அந்த வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் துவங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தகவல் கூறினார்.

முறைகேடு இல்லை
9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் உள்ளபடியே நேர்மையாக நடத்தப்பட்டது என்றும் அதிமுக ஆட்சியில் தான் முறைகேடுகள் நடந்தன எனவும் கூறினார். உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் எனத் தெரிந்ததால் தான் இப்போதே தேர்தல் முறையாக நடக்கவில்லை என அதிமுகவினர் குற்றஞ்சாட்டத் தொடங்கியுள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications