திருச்சி அருகே கொடூர விபத்து.. முசிறி வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சாலை விபத்தில் பலியாகியுள்ளார். திடீரென கார் டயர் வெடித்ததில் எதிரே வந்த அரசு பஸ் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது, அரசு பஸ் மீதும், அங்குள்ள ஜேசிபி வாகனம் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
முசிறி வருவாய் கோட்டாட்சியராக இருந்து வந்தவர் ஆரமுத தேவசேனா. இவர் இன்று காலை அரசு ஜீப்பில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே திருச்சி - குளித்தலை சாலையில் முக்கொம்பு அருகே கரூர் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென அரசு ஜீப்பில் டயர் வெடித்துள்ளது.

இதனால் எதிரே வந்த பஸ் மீது மோதாமல் இருக்க டிரைவர் இடதுபக்கமாக திருப்பியதாக தெரிகிறது. எனினும் அரசு பஸ் மீதும், அருகில் இருந்த ஜேசிபி வாகனத்தின் மீதும் அரசு ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜீப் உருக்குலைந்தது. ஜீப்பில் இருந்து வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா உயிரிழந்தார்.
சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் டிரைவரும் பலத்த காயமடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். உடனடியாக டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து உயிரிழந்த வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications