அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்? திருச்சி மாநாட்டில் நடக்கும் சம்பவம்.. சீறும் எடப்பாடி தரப்பு
திருச்சி: ஓபிஎஸ் மாநாடு திருச்சியில் ஜோராக ரெடியாகி வரும் நிலையில், அங்கே அமைந்துள்ள மாநாட்டு மேடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கு எடப்பாடி தரப்பினர் என்ன செய்யப் போகிறார்கள் என்பதே கேள்வியாக உள்ளது.
அதிமுகவில் கடந்த சில காலமாகவே குழப்பம் இருந்து வருவது அனைவருக்கும் தெரியும். ஆட்சியில் இருக்கும் போது, அதிமுக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோரின் தலைமையில் இயங்கியது.
அப்போதே இரு தரப்பிற்கும் இடையே மோதல் இருந்து வந்ததாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், அப்போது அது பெரிதாக வெளியே தெரியவில்லை. கடந்தாண்டு தான் பிரச்சினை பெரிய விஷயமானது.

அதிமுக: இரட்டை தலைமையில் கீழ் இயங்குவதால் விரைந்து முடிவெடுக்க முடிவதில்லை என்றும் இதனால் கட்சி ஒற்றை தலைமையின் கீழ் இயங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து எடப்பாடியைப் பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதற்கு ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவிக்க அவர் இல்லாமலேயே அதிமுக பொதுக்குழு கூடியது. அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானார். மேலும், ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த பொதுக்குழுவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளில் வரிசையாக எடப்பாடிக்கு ஆதரவாகவே தீர்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் எடப்பாடி தரப்புக்கு ரொம்பவே ஹேப்பி.. கட்சிக்குள் தனது ஆதரவாளர்கள் அதிகரிப்பதால் அவர் அடுத்த கட்டத்திற்குத் தயாரானார். இதற்கிடையே பொதுச்செயலாளருக்குத் தேர்தல் நடத்தப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகவும் அறிவிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் வழக்கு அவருக்கு ஆதரவாக இல்லை.

ஓபிஎஸ்: இப்படி அடுத்தடுத்து பின்னடைவைச் சந்தித்துள்ளதால் ஓபிஎஸுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஓபிஎஸ் தனக்கு இருக்கும் சப்போர்ட்டை நிரூபிக்கும் வகையில் மிகப் பெரிய மாநாட்டை நடத்தத் திட்டமிட்டார். கடந்த 10ஆம் தேதி திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசித்த நிலையில், மிகப் பெரிய மாநாட்டை நடத்த முடிவு செய்தனர்.
திருச்சி பொன்மலையில் உள்ள ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் இந்த மாநாடு நடக்க உள்ளது. இதற்கான பணிகளை ஓபிஎஸ் அணியினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாநாடு பணிகளைக் கவனித்து வருகின்றனர். ஓபிஎஸுக்கு தொடர் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அதை மாற்றும் வகையில் இந்த மாநாடு இருக்கும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மெகா மாநாடு: இது ஒரு பக்கம் இருக்க மாநாட்டில் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடி, சின்னத்தைப் பயன்படுத்தக்கூடாது என எடப்பாடி தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக எடப்பாடி தரப்பினர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மேல் புகாரும் கொடுத்துள்ளனர். இருப்பினும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொடி, சின்னத்தைப் பயன்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க திருச்சியில் மாநாடு மிகவும் ஜோராக ரெடியாகி வருகிறது. குறிப்பாகக் கொடியைப் பயன்படுத்தவே கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் மாநாட்டு மேடையையே சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் போல வடிவமைத்துள்ளனர். தலைமை அலுவலகம் போல வடிவமைத்தது மட்டுமின்றி, அதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகை என்று பெயரும் வைத்துள்ளனர்.
கட்சியின், கொடி மற்றும் சின்னத்திற்கு எடப்பாடி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இப்போது ஓபிஎஸ் தரப்பினர் மாநாடு மேடையையே அதிமுக அலுவலகம் போல அமைத்துள்ளனர். மேலும், ஓபிஎஸ் தரப்பினர் இந்த திருச்சி மாநாடு மிகப் பெரிய திருப்பத்தைத் தரும் என்றும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்தச் சூழலில், ஓபிஎஸின் இந்த மாநாட்டிற்கு எடப்பாடி தரப்பினர் என்ன செய்யப் போகிறார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும்.











Click it and Unblock the Notifications