திருச்சி சிவா, சல்மா, திலக்.. ராஜ்ய சபாவில் ஆதிக்கம் செலுத்தும் திருச்சி.. அள்ளிக் கொடுக்கும் திமுக!
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் இருந்து ஒரே நேரத்தில் 3 பேர் ராஜ்ய சபா எம்பிக்களாக பணியாற்ற இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. ஏற்கனவே திமுக சார்பாக கடந்த ஆண்டு ராஜ்ய சபாவுக்கு சல்மா அனுப்பப்பட்டிருந்தார். தற்போது திருச்சி சிவாவுக்கு திமுக மீண்டும் வாய்ப்பு அளித்திருப்பதோடு, காங்கிரஸ் வேட்பாளராக திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த 37 ராஜ்ய சபா இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கியது. ராஜ்ய சபா தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. மாநிலங்களவை எம்பி-க்களாக இருக்கும் திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்ஆர் இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், ஜிகே வாசன், தம்பிதுரை ஆகியோரின் பதவிக் காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும் என்று தெரிய வந்தது.
அதன்படி திமுக தரப்பில் ஒரு ராஜ்ய சபா சீட்டை தேமுதிக மற்றும் மற்றொரு ராஜ்ய சபா சீட்டை காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கியது. இதன்பின் திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தேமுதிக வேட்பாளராக சுதீஷ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் அதிமுக தரப்பில் தம்பிதுரைக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சீட்டை பாமக தலைவர் அன்புமணிக்கு அளித்துள்ளது. இதனிடையே திருச்சி மாவட்டத்தில் இருந்து ஒரே நேரத்தில் 3 உறுப்பினர்கள் ராஜ்ய சபாவுக்கு தேர்வாகி இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த ராஜ்ய சபா தேர்தலில் திமுக சார்பாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் சல்மா தேர்வு செய்து அனுப்பி வைக்கப்பட்டார்.
தற்போது மீண்டும் திருச்சி சிவாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம் காங்கிரஸ் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரான கிறிஸ்டோபர் திலக் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான். இதன் மூலமாக ராஜ்ய சபாவில் திருச்சி மாவட்டத்தில் இருந்து மட்டும் 3 பேர் தேர்வாகி இருப்பது விவாதமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications