தவெகவுக்கு வரும் 'மேயர்' முகம்.. புதுக்கோட்டை அரச குடும்ப வாரிசு சாருபாலா தொண்டைமான் இணைய முடிவு?
சென்னை: திருச்சி முன்னாள் மேயரும், புதுக்கோட்டை அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான சாருபாலா தொண்டைமான், தவெகவில் இணையத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளில் இருந்தவர் சாருபாலா தொண்டைமான். இப்போது தவெகவில் இணைந்தால், அவருக்கு முக்கியத்துவம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தவெக ஆட்சி அமைத்த பின், தமிழ்நாடு முழுவதும் கட்டமைப்பு ரீதியாக வலுவாக்கி கொண்டு வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் தவெகவின் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கின்றன. அதிமுக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளில் இருந்து வரும் நிர்வாகிகளை தவெக தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. ஏற்கனவே திருச்சியில் இருந்து அதிமுகவின் முக்கிய முகங்கள் தவெக பக்கம் சாய்ந்துவிட்டன.

அந்த வகையில் அமமுக அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான் தவெகவில் இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழக அரசியல் வட்டாரங்களில் "மேயர் சாருபாலா" என்று பரவலாக அறியப்படும் இவர், புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 2001 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் திருச்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கைப் பெற்றவர்.
தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக இயங்கிய இவர், பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக மற்றும் அமமுக எனப் பல்வேறு அரசியல் கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போதும் அமமுகவில் இருந்து வருகிறார். தவெக தங்களது கட்சியில் மக்கள் செல்வாக்குள்ள மற்றும் நிர்வாகத் திறமை வாய்ந்த மூத்த தலைவர்களை இணைப்பதில் தீவிரமாக உள்ளது.
குறிப்பாக, மத்திய தமிழகமான திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் தவெக-வின் அடித்தளத்தைப் பலப்படுத்த வலுவான ஒரு முகம் தேவைப்படுகிறது. சாருபாலா தொண்டைமான் தவெக-வில் இணைவதன் மூலம், அரச குடும்பத்தின் மீதான பாரம்பரிய மதிப்பும், அவரது முந்தைய மேயர் பதவிக்கால நற்பெயரும் திருச்சி மண்டலத்தில் கட்சிக்கு மிகப் பெரிய மைலேஜாக அமையும் என தவெக கணக்கு போடுவதாக தெரிகிறது.
ஏற்கனவே டெல்டா மற்றும் மத்திய மாவட்டங்களில் தவெக-வின் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், சாருபாலா தொண்டைமானின் அரசியல் நகர்வு பேசுபொருளாகி இருக்கிறது. அவர் தவெக-வில் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதற்கேற்ப ஏற்கனவே சாருபாலா தொண்டைமான் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications
