ஆரம்பத்தில் இருந்தே எல்லமே தப்பு.. தசுவக சொன்னது எல்லாமே பொய்! அடித்துப் பேசும் எஸ்ஆர்எம் குழுமம்.!
திருச்சி : அரசு வாடகை நிலத்தில் இயங்கி வரும் திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டல் விவகாரத்தில், நிலுவைத் தொகை செலுத்தவில்லை என உண்மைக்கு புறம்பான தகவல்களை தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் பரப்பி வருகிறது என எஸ்ஆர்எம் குழுமம் விளக்கமளித்துள்ளது.
திருச்சி காஜாமலை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு (டிடிசிசி) சொந்தமான 4.74 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 30 ஆண்டு காலம் குத்தகை அடிப்படையில் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமான எஸ்ஆர்எம் நட்சத்திர ஹோட்டல் கடந்த 1994-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

குத்தகை காலம் நேற்று முன் தினத்துடன் நிறைவடைந்ததையடுத்து, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் குத்தகை காலம் நிறைவடைந்ததாக அன்று மாலை ஹோட்டல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனையடுத்து குத்தகை காலம் முடிவடைந்ததால் அந்த ஹோட்டலை கையகப்படுத்த அதிகாரிகள் அங்கு சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் எஸ்.ஆர்.எம். ஹோட்டல் குழுமத்தின் நிறுவனர் திரு.பாரிவேந்தர் அவர்கள், பெரம்பலூர் தொகுதியில் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவை எதிர்த்துப் போட்டியிட்ட காரணத்துக்காகப், பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பான சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துன் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு கிராமத்தில் 4.70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் எஸ்.ஆர்.எம் ஓட்டல் நிறுவனத்திற்கு, கடந்த 1994-ஆம் ஆண்டில் 30 வருட காலத்திற்கு குத்தகை விடப்பட்டது. மேற்படி இடம் குத்தகைதாரருக்கு 14.06.1994 அன்று ஒப்படைக்கப்பட்டது.
மேலும் நிலுவைத் தொகையை செலுத்த 02.05.2024 நாளன்று (ஒரு மாத காலத்திற்கு முன்பாக) குத்தகைதாரருக்கு எழுத்துப்பூர்வமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல், குத்தகைக் காலம் 13.06.2024 அன்றுடன் முடிவடைகிறது என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்ததாரரால் நாளது தேதி வரை நிலுவைத் தொகை ரூ.38,85,65,837/- செலுத்தப்படாமல் இன்னும் நிலுவையாகவே உள்ளது.
உண்மை நிலை இவ்வாறு இருக்க, சில ஊடகங்களில் எஸ்.ஆர்.எம். ஹோட்டல் சார்பாக தவறான மற்றும் உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குத்தகைக் காலம் முடிவடைந்ததாலும், குத்தகைதாரர் முறையாக, முழுமையான குத்தகைத் தொகையைச் செலுத்தாததாலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அரசாணை மற்றும் ஒப்பந்தத்தின்படிதான் முறையான நடவடிக்கையை எடுத்துள்ளது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.” என கூறப்பட்டிருந்தது..
இந்நிலையில் திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டல் விவகாரத்தில், நிலுவைத் தொகை செலுத்தவில்லை என உண்மைக்கு புறம்பான தகவல்களை தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் பரப்பி வருகிறது என எஸ்ஆர்எம் குழுமம் விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக அவர் அளித்துள்ள அறிக்கையில்,” 1996ம் ஆண்டு எஸ்.ஆர்.எம் நிறுவனம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, இன்று வரை எஸ்.ஆர்.எம் குழுமம் சார்பாக, வாடகைத் தொகையை முழுமையாக செலுத்தியுள்ளது.
3 வருடங்களுக்கு ஒரு முறை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள உயர்வு தொகையும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத் தொகை முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடாத அதிக தொகையை செலுத்த, சுற்றுலா வளர்ச்சி கழகம் வற்புறுத்திய தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் ஜிஎஸ்டி வரிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதே சமயம் 2003-ம் ஆண்டு முதல் வரி தொகையை கணக்கிட்டு SRM Hotel செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான பாக்கித் தொகை நிலுவையில் இருப்பதாகக் கூறி 12 கோடி ரூபாய் செலுத்துமாறு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் கடந்த 4ஆம் தேதி கடிதம் (04.06.2024), எஸ்.ஆர்.எம் ஹோட்டலுக்கு கடிதம் அனுப்பியது.
இது எந்த ஒப்பந்தத்திலும் குறிப்பிடாத ஒன்றாகும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஊடகங்களில் அளித்து வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது. குத்தகை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அது குறித்த விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவது சரியானது அல்ல எனவும், எஸ்.ஆர்.எம் ஹோட்டல் சார்பாக தெரிவிக்கிறோம்” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
