உதயநிதி சொல்லிட்டாரு.. கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் குட் நியூஸ்!
திருச்சி: 20 லட்சம் லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டு மிக விரைவாக மாணவர்களுக்கு வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்த விழாவில் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ராமேஸ்வரம் பள்ளி மாணவி கொலை சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. படிக்க வந்த மாணவிக்கு நேர்ந்துள்ள கொடுமையை பெற்றோர் மனநிலைமையில் இருந்து பார்க்கும்போது வேதனையைத் தருகிறது. சொந்த காரணத்திற்காக, இந்த கொலை நடந்திருந்தாலும் கூட கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "20 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு மிக விரைவாக வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் இருக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. குழந்தைகள் எந்த விதமான போதை பழக்கத்திற்கும் அடிமையாகக் கூடாது என "மகிழ் முற்றம்" என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.
தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறோம். இரட்டை இலக்கு வளர்ச்சி அடைந்த மாநிலம் தமிழகம். இதன் காரணமாகத்தான் தமிழ்நாட்டை பற்றி பெருமையாக சொல்கிறார்கள் ஆனால், அந்த வளர்ச்சியையும் சிலர் தடுக்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்லும் தருவாயில் மடிக்கணினி வழங்கப்பட்டது. கொரோனா பரவல் காலகட்டத்தில் இந்தத் திட்டம் முடங்கியது. இந்நிலையில் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், திமுக அரசால் மீண்டும் செயல்படுத்தப்பட இருக்கிறது.
2025-26 நிதியாண்டில், 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மே மாதம் சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, இந்த நிதியாண்டில் மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது டேப்லெட் வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழக அரசு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கியது.
கல்லூரியில் படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் தரப்போகிறோம் என அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அறிவித்திருந்தார். கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச அளவில் டெண்டர் கோரியது. டெல், ஏசர் ஆகிய நிறுவனங்கள் குறைந்த தொகைக்கான டெண்டர் கோரின.
2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள லேப்டாக்கள் தமிழகத்துக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. விரைவில் மீதமுள்ளவையும் வந்து சேர உள்ளதாம். விரைவில் அவை கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன்னரே மாணவர்களுக்கு லேப்டாப்களை விநியோகிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பிப்ரவரி மாதத்திற்குள் மாணவர்களுக்கு லேப்டாப்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications