விபச்சார வழக்கு.. கேரள ஸ்பாவால் சிக்கிய பெண் எஸ்ஐ.. கூகுள் பே ஐடியால்.. சிக்கலில் உயர் அதிகாரிகள்?
திருச்சி: திருச்சியில் விபச்சார வழக்கை சாதகமாக முடித்துத் தர கேரள ஆயுர்வேத மசாஜ் சென்ட்ரில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் எஸ்ஐ ரமாவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் இன்று கையும், களவுமாக கைது செய்தனர்.
திருச்சி மாநகரில் உள்ள 60 ஸ்பா சென்டர்களிலிருந்து மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை தனது வங்கிக் கணக்குக்கு கூகுள் பே மூலம் லஞ்சமாக பெற்று அதை உயர் அதிகாரிகளுக்கும் கொடுத்து வந்தாராம் இந்த எஸ்ஐ ரமா..

திருச்சியில் உள்ள ஸ்பா சென்டர்களில் அடிக்கடி எஸ் ரமா லஞ்சம் வாங்கியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த கேரளாவைச் சேர்ந்த ஸ்பா உரிமையாளர் ஒருவர் அவரை லஞ்ச ஒழிப்புதுறையில் சிக்க வைத்தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த சரத்தின் மனைவி அஜிதா, திருச்சியில் வசித்து வருகிறார். அஜிதா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே கேரள ஆயுர்வேத மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் முறையாக உரிமம் பெற்று நடத்தப்பட்டு வருகிறதாம்.
இந்நிலையில் திருச்சி சத்திரம் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடத்ததாக கூறி, விபச்சார தடுப்புப் பிரிவு போலீஸார் ஏப்ரல் மாதம் வழக்குபதிவு செய்தார்கள். இந்த வழக்கில் அஜிதா மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த வழக்கை அஜிதாவுக்கு சாதகமாக முடித்து தருவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தருமாறு உதவி ஆய்வாளர் ரமா, அஜிதாவிடம் வற்புறுத்தினாராம். ஆனால் தன்னுடைய தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு நஷ்டமடைந்துள்ளதால், ரூ.10 ஆயிரம் தர இயலாது என அஜிதா கூறினாராம்.
ஆனால் ரூ.3 ஆயிரம் அட்வான்சாகக் கொடுத்தால் மட்டுமே விபச்சார வழக்கை சாதகமாக முடித்து தர உதவுவேன் என்று உதவி ஆய்வாளர் ரமா கூறினாராம்.லஞ்சம் தர விரும்பாத அஜிதா, இது தொடர்பாக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் கூறியுள்ளார்.
இந்த புகாரின் பேரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், சேவியர் ராணி, பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் போலீஸார் கொண்ட குழுவினர் திருச்சி விபச்சார தடுப்பு காவல் நிலையத்தில், இன்று காலை அஜிதாவிடமிருந்து ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது உதவி ஆய்வாளர் ரமாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், உதவி ஆய்வாளர் ரமா, கடந்த 4 ஆண்டுகளாக திருச்சி விபச்சாரத் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் திருச்சி மாநகரில் உள்ள 60 ஸ்பா சென்டர்களிலிருந்து மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை தனது வங்கிக் கணக்குக்கு கூகுள் பே மூலம் லஞ்சமாக பெற்றாராம். அத்துடன் அந்த லஞ்சப் பணத்தை தனது உயர் அதிகாரிகளுக்கு பிரித்து கொடுத்தார் என்று முதற்கட்டவிசாரணையில் கூறுகிறார்கள் .
அதேநேரம் எஸ்ஐ ரமா எந்தெந்த உயர் அதிகாரிகளுக்கு எவ்வளவு தொகை கொடுத்துள்ளார் என்பது குறித்த விவரங்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் எஸ்ஐயை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் இன்று கையும், களவுமாக கைது செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications