முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு.. முன்னாள் டிஜிபி நடராஜ் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு
திருச்சி: முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதாக முன்னாள் டிஜிபி நடராஜ் மீது திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக காவல்துறையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர் ஆர். நடராஜ். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அதிமுகவில் இணைந்த நடராஜ், 2016 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். இந்த நிலையில், வாட்ஸ் அப் குழு ஒன்றில் இந்துக்களின் ஓட்டு தங்களுக்கு வேண்டாம் என்றும் இந்து ஓட்டுக்கள் இல்லாமலே நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு பொய்யான செய்தியை நடராஜ் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், "ஒரு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி தான் இருக்கும் வாட்ஸ்-அப் குழுவில் ஒரு செய்தியை பரப்பி கொண்டிருக்கிறார். அதில், இந்துக்கள் ஓட்டு எங்களுக்கு வேண்டாம். அந்த ஓட்டுகள் இல்லாமலே நாங்கள் வெற்றி பெற்று விடுவோம். அப்படி நான் சொன்னதாக என்னுடைய பெயரை போட்டு ஓய்வு பெற்ற மிகப்பெரிய பொறுப்பில் இருந்த போலீஸ் அதிகாரி பதிவிட்டிருக்கிறார்.
அவரின் பெயரை இங்கு சொல்ல விரும்பவில்லை. அவர் மீது வழக்கு போட்டுள்ளோம். இன்று செய்தி வரும்" என்று கூறியிருந்தார். முதல்வர் இப்படி பேசிய சில மணி நேரங்களில் முன்னாள் டிஜிபியும் முன்னாள் எம்.எல்.ஏவுமான நடராஜ் மீது திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருச்சி மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீலா அளித்த புகார் மனு அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதக்கலவரத்தை தூண்டி விடுதல், அவமதித்தல், வதந்தி பரப்புதல் மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
