திருச்சி கலெக்டர், எஸ்பி கூண்டோடு இடமாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி.. பரபர பின்னணி
திருச்சி: ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவாகரத்திற்கு பிறகு திருச்சி மாவட்ட கலெக்டர், எஸ்பி அதிரடியாக இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோரை தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்ட கலெக்டராக திவ்யதர்ஷினி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட எஸ்பி ஆக கோவை மாநகர டிசிபி மயில்வாகனன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் அல்லாத பணி
இதனிடையே திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சப் கலெக்டர் நிஷாத் கிருஷ்ணாவும் தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீரங்கம் சப்கலெக்டராக விஷ்ணு மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

காரில் சோதனை
ஸ்ரீரங்கம் பெட்டவாய்த்தலை பகுதியில் ராஜசேகரன் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். . அப்போது அவ்வழியாக வந்த முசிறி தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய அ.தி.மு.க வேட்பாளருமாகிய செல்வராஜின் காரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த காரில் செல்வராஜ் இல்லை. ஆனால் அந்த காரில் முசிறி அ.தி.மு.கவின் 11வது கிளைச் செயலாளர் சத்யராஜ், அ.தி.மு.க உறுப்பினர் ரவி, எம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணி செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் காரில் பயணித்துள்ளனர். காரை சிவகுமார் என்பவர் ஓட்டி வந்தார்.

அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
அந்த காரை சோதித்ததில் ஒரு கோடி ரூபாய் இருந்தது. பணத்தையும் காரையும் பறிமுதல் செய்த பறக்கும் படையினர், இதுகுறித்து ஸ்ரீரங்கம் தேர்தல் நடத்தும் அலுவலர் நிஷாந்த் கிருஷ்ணாவிற்கு தகவல் அளித்து, அந்தப் பணம் மற்றும் காரை ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தார்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் பணம் எண்ணப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம்
இதுதொடர்பாகவும் வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தை அடுத்தே திருச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி உள்ளிட்டோர் கூண்டோடு இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications