கி.வீரமணிக்கு ரூ.1 லட்சம் கொடுத்த திருச்சி மாவட்ட திமுக! எதற்காக இந்தப் பணம்? காரணம் என்ன?
திருச்சி: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மேற்கொண்டு வரும் மாநில உரிமை மீட்பு பெரும் பயணம் வெற்றிபெற வேண்டி திருச்சி மாவட்ட திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி திமுகவில் தெற்கு, வடக்கு, மத்திய என மூன்று மாவட்டங்கள் இருப்பினும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக என்ற பெயரில் இந்த நிது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 3-ம் தேதி நாகர்கோவிலில் தொடங்கிய கி.வீரமணியின் நெடும் பயணம் வரும் 25-ம் தேதி சென்னையில் நிறைவடைகிறது.

கீ.வீரமணி பயணம்
நீட் தேர்வு விலக்கு -தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு -மாநில உரிமை மீட்பு என்ற மூன்று முழக்கங்களுடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தமிழகம் முழுவதும் பெரும் பயணம் சென்று கொண்டிருக்கிறார். மாவட்ட வாரியாக பொதுக்கூட்டங்கள் நடத்தி மத்திய அரசின் செயல்பாடுகள் பற்றி விமர்சித்து வருகிறார். மொத்தம் 23 நாட்கள் பயணத் திட்டம் வகுத்துள்ள அவர் நேற்று திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அமைச்சர்கள் இருவர்
திராவிடர் கழகம் சார்பாக நடத்தப்பட்ட அந்தப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனிதநேய ஜனநாயக கட்சி துணை தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் நிறைவில், கீ.வீரமணியின் பெரும்பயணம் வெற்றிபெற வேண்டி ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக சார்பில் ரூ. 1 லட்சம் நிதி வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அமைச்சர் நேரு
அமைச்சர் நேருவை பொறுத்தவரை ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டமுடையவர் என்றாலும் கூட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு சற்று தாராளம் காட்டக்கூடியவர். அதேபோல் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திருச்சி தெற்கு, தஞ்சை என இரண்டு மாவட்டங்களிலும் நிற்க நேரமில்லாமல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டிய சூழலிலும் கீ.வீரமணி மீது கொண்ட மரியாதை காரணமாக திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

எந்தெந்த ஊர்கள்
நாளை நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் கி.வீரமணி குன்னூரிலும், திருப்பூரிலும் நடைபெறும் மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து ஈரோடு, கரூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் அவர் வரும் 25-ம் தேதி முதல்வர் ஸ்டாலினை அழைத்து கூட்டம் நடத்தி சென்னையில் பயணத்தை நிறைவு செய்கிறார்.












Click it and Unblock the Notifications